உங்களில் ஒருவன்: ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?
உங்களில் ஒருவன்: ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?
ADDED : பிப் 17, 2024 04:41 AM

'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை, 200 தொகுதிகளை கடந்து, தற்போது சென்னை நகரில் நடந்து வருகிறது. ஆனால், மக்களைஎல்லாம் நடந்து சென்று சந்திக்காமல், பொது இடங்களில் மக்களை சந்தித்து பேசும்படி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக பாதயாத்திரை நிகழ்ச்சி, சென்னை நகருக்குள்ளே மட்டும் நடந்து வருகிறது. அதன்படி மாதவரம், மதுரவாயல், அம்பத்துார், கொளத்துார், பெரம்பூர் மற்றும் திரு.வி.க., நகர் பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து பேசக்கூடிய அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.
பெயர் வைத்தால் போதுமா?
சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
'பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம்; 98 சதவீத வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன' என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
வடசென்னையில் தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாமல், மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால், எளிய மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஒரே தகுதி தான்
சென்னை எம்.பி.,க்களாக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகிய மூவருக்கும் இருக்கும் ஒரே தகுதி, வாரிசு என்பது தான். ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?
சென்னை பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தலா, 10,500 ரூபாய் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக பா.ஜ., சார்பாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, தி.மு.க., அரசை வலியுறுத்தினோம். ஆனால், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே கொடுத்தனர். அந்தப் பணத்திலும் 75 சதவீத பணம், மத்திய அரசின் பங்கு.
* சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, 1,000 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது
* மழை நீர் வடிகாலுக்கு என தனியாக 1,300 கோடி ரூபாயும், நீர்நிலைகளின் கரைகளை மேம்படுத்த 560 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது
* ஆனால், இவை அனைத்தையும் தமிழக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குறி
* தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான நகரம் என, எந்த அடிப்படை வசதிகளும் சென்னையில் நிறைவேற்றப்படவில்லை.
துாய்மையான நகரங்களில் 44வது இடத்தில் இருந்த சென்னை, இந்த ஆண்டு 199வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 12 சதவீத குப்பை கழிவுகள் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகின்றன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 2,69,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது. தமிழகத்தின் மொத்தக் கடன்8 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
ஆனாலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. தென்தமிழகத்திற்குச் செல்ல, பேருந்து பிடிக்கவே வெளியூரான கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு குடும்பத்திற்காக, மாநிலத்தின் மொத்த நலனும் அடகு வைக்கப்படுகிறது.
கொளத்துார் தொகுதி சட்டசபை உறுப்பினராக அமைச்சர் சேகர்பாபு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர, முதல்வர் ஸ்டாலின் இல்லை. இந்தியாவிலேயே முதல்வராக இருப்போரின் தொகுதிகளில், கொளத்துார் மட்டுமே மிகவும் பரிதாபமாக உள்ளது.
துரும்பை கூட...
பிரதமர் மோடி அரசில், பெண் குழந்தைகள் நம் நாட்டின் சொத்துக்கள் என்று, பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கர்ப்பிணியர் பதிவு செய்தவுடன், அவர்கள் வங்கி கணக்குக்கு 1,000 ரூபாய், ஆறாவது மாதம் 2,000 ரூபாய், குழந்தை பிறந்தவுடன் 2,000 ரூபாய் என, கர்ப்பிணியருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்படி பெண்களுக்கென ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி, பெண்களை இரு கண்களாக காப்பாற்றி வருகிறது.
கடந்த 67 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில், அதன் கூட்டணியில் இருந்து தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பெண்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. சாமானிய மக்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்ளும்.
சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது.
இந்நிலை மாற வேண்டும் என்றால், தற்போது இருக்கும் சென்னையின் எம்.பி.,க்களுக்கு இனியொரு முறை வாய்ப்பளிக்கக் கூடாது. கூடவே, தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிப்போம்.
பயணம் தொடரும்...