ரூ.10,00,00,00,00,000 பின்னலாடை ஏற்றுமதி 2030ல் எப்படி சாத்தியம்?
ரூ.10,00,00,00,00,000 பின்னலாடை ஏற்றுமதி 2030ல் எப்படி சாத்தியம்?
UPDATED : ஏப் 27, 2025 06:54 AM
ADDED : ஏப் 27, 2025 06:40 AM

'ஒரு லட்சம் கோடி ரூபாய்' என்று சொல்லும் போதே ஒருவித மலைப்பு தோன்றும். வரும் 2030ல் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கொண்டிருக்கிற வர்த்தக இலக்கு இதுதான். தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை எட்டிவிட்ட திருப்பூர், 2030க்குள் இந்த இலக்கை எட்டிவிட முடியுமா என்ற சந்தேகப்பார்வை பலருக்கும் இருப்பது இயல்புதான். ஆனால், 'இது சாத்தியமாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் சாதகமாக உள்ளன'' என, தொழில்துறையினர் உறுதிபடக் கூறுகின்றனர்.
'டாலர் சிட்டி' எனப்படும் திருப்பூர் பின்னலாடை தொழில் நகரம், அமெரிக்காவுடன் அதிகபட்ச ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடைபெற உள்ள 16 நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த, 2024ம் ஆண்டு நிலவரப்படி, உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா மட்டும், 7.11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை இறக்குமதி செய்துள்ளது. அதிக நுகர்வோரை கொண்ட அமெரிக்காவுக்கு, நம் நாட்டில் இருந்து மட்டும், 41 ஆயிரத்து, 930 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 55 சதவீதம் பின்னலாடைகள் பங்கு வகிக்கின்றன. நாட்டின் மொத்த பின்னலாடை உற்பத்தியில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், 55 சதவீதம்.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன்
இந்தியாவுடன் வர்த்தக முனைப்பு
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து வரும் மறைமுக வர்த்தக போரால், சீனாவின் அமெரிக்க ஏற்றுமதியில் சுணக்கம் வரும். அமெரிக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்ததாக இந்தியாவுக்குத்தான் ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கடந்த, 10 நாட்களாக, அமெரிக்காவை சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள், இந்தியா முழுவதும் உள்ள உற்பத்தியாளர்களுடன் வர்த்தக விசாரணை நடத்தி வருகிறது.
வங்கதேசத்தில் நிலவிய குழப்பத்தில் இருந்து தற்காலிக தீர்வு கிடைத்தாலும், நிலையான அரசியல் நிலவும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்யவே, அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் நாடுகள் விரும்புகின்றன. பெரும்பாலான நாடுகள், இந்தியாவுடனான வர்த்தகத்தையே விரும்புகின்றன.
போட்டி நாடுகளுக்கு வர்த்தக இடர்ப்பாடு
அமெரிக்காவின் அதிரடி வரி உயர்வால், போட்டி நாடுகளுடனான வர்த்தகத்தில் இடர்ப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் வங்கதேசத்துடன் வர்த்தக தொடர்பில் இருந்தவர்கள், திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த, 10 ஆண்டுகால இலக்கை திருப்பூர் இந்தாண்டு எட்டியுள்ளதாக, தொழில்துறையினர் அறிவித்துள்ளனர்; அதாவது, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை அடைந்துவிட்டனர். அடுத்ததாக, 2030ம் ஆண்டில், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற பெரிய இலக்கை நோக்கி பயணிக்க துவங்கி விட்டனர்.
'லட்சம் கோடி லட்சியம்; எட்டப்போவது நிச்சயம்' என்பது ஏற்றுமதியாளர்களின் முழக்கமாக மாறியுள்ளது.
- நமது நிருபர் -