ஆளும்கட்சியினர் நடத்திய கூட்டுத்தொழிலுக்கு வேட்டு!
ஆளும்கட்சியினர் நடத்திய கூட்டுத்தொழிலுக்கு வேட்டு!
ADDED : ஜன 25, 2024 06:07 AM

கணபதியில் சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., கவுன்சிலர் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், இதேபோல நகருக்குள் ஆளும்கட்சியினரால் நடக்கும் சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் சூதாட்ட கிளப்கள், இல்லீகல் 'பார்'கள், மசாஜ் சென்டர்கள் நடந்து வருகின்றன. இதனால் ஏராளமானவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ளனர்.
அதிலும் சூதாட்ட கிளப்களில், பலரும் பல லட்சங்களையும், சொத்துக்களையும் தொலைத்துள்ளனர். இந்த கிளப்களில், சட்டவிரோதமாக மது, கஞ்சா மற்றும் மூன்று நம்பர் லாட்டரி விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது.
இவற்றை பெரும்பாலும் ஆளும்கட்சியினர் அல்லது அவருக்கு வேண்டியவர்கள் தான் நடத்துகின்றனர். அந்தந்தப் பகுதிகளில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, நன்கு 'கவனிக்கின்றனர்'.
இதனால் இந்த கிளப்களை நடத்துவதை, அவர்கள் கண்டு கொள்வதில்லை. மற்ற பகுதிகளை விட சரவணம்பட்டி, குனியமுத்துார் போன்ற மாநகராட்சியின் எல்லைப் பகுதிகளில் தான், இந்த சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடக்கின்றன.
குறிப்பாக, கணபதி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதையொட்டியே மூன்று இடங்களில், இந்த கிளப்கள் நடந்து வந்துள்ளன.
இதுபற்றி, நமது நாளிதழிலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் பெயரளவுக்கே வழக்குப் போட்டு கணக்குக் காட்டி வந்தனர்.
கவுன்சிலரின் கணவர் மீது வழக்கு
இந்நிலையில் தான், முதல் முறையாக கோவை மாநகராட்சி 30 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் சரண்யாவின் கணவர் செந்தில்குமார் மீது, சூதாட்ட கிளப் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாகவுள்ளார்.
செந்தில் குமார், தி.மு. க., கிளைக்கழக நிர்வாகியாகவும் உள்ளார். இவருடைய மனைவியும், கவுன்சிலருமான சரண்யா, கோவை மேயர் கல்பனாவின் தங்கையாவார்.
ஆளும்கட்சியில் இவ்வளவு 'பவர்புல்' ஆக இருந்தும், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது, கோவை மக்களிடையே வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'பலமுறை போலீசார் எச்சரித்தும் கேட்காததால்தான், இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்போடாமல் இருக்கவும், கவுன்சிலர் கணவரை தப்புவிக்கவும், மாநகராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலரும் தீவிர முயற்சி செய்தனர்.
ஆனால் போலீசார் மேலிடம் வரை தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றே வழக்கு பதிந்துள்ளனர். இந்த கிளப்களிலிருந்து, ஆளும்கட்சியின் பகுதிக்கழக நிர்வாகிகளுக்கும், 'பங்கு' போய்க் கொண்டிருந்தது' என்றனர்.
இதேபோல, நகரின் பல பகுதிகளிலும், ஆளும்கட்சியினராலும் அல்லது அவர்களின் ஆதரவாலும் சட்டவிரோத 'பார்'கள், சூதாட்ட கிளப்கள், லாட்டரி விற்பனை நடந்து வருகின்றன.
இதில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள, சில போலீசாரும் கூட்டுச் சேர்ந்துள்ளனர். கணபதியில் இந்த கூட்டுத் தொழிலுக்கு போலீசார் வேட்டு வைத்திருப்பதால், மற்ற பகுதிகளில் இவற்றை நடத்தும் ஆளும்கட்சியினரும் பீதியடைந்துள்ளனர்.
இதே அதிரடியை, மற்ற பகுதிகளிலும் போலீசார் தொடர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
-நமது நிருபர்-