ரோல்ஸ்ராய்ஸ் காரை நான் வாங்க மக்களின் கிட்னியை கழற்றணும்: தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ரோல்ஸ்ராய்ஸ் காரை நான் வாங்க மக்களின் கிட்னியை கழற்றணும்: தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ADDED : ஆக 13, 2025 04:22 AM

சென்னை: ''நான் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்றால், ஊரில் உள்ள அனைவரின் கிட்னியையும் கழட்டினால் தான் வாங்க முடியும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன் பேசியது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்தில் ஏழை மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த, திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றின், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை, அரசு ரத்து செய்து உள்ளது.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உரிமையாளர் சீனிவாசன் மகனும், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான கதிரவன், தன் தொகுதி மக்களுக்கு, விருந்து வைத்து நலத்திட்ட உதவி வழங்கினார்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொகுதி நிர்வாகி ஒருவர் கிட்னி விவகாரம் குறித்து, கதிரவனிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அவர் அளித்த பதில்:
எப்போது காசு கம்மியாக இருக்கிறதோ, அப்போது கிட்னியை எடுத்து விடுவோம். கூட்டத்தில் கேள்வி கேட்டதால் , ஜாலியாகத் தான் சொல்கிறேன்.
அரசிடம் அனுமதி இதை பற்றி இதுவரைக்கும் நான் பேசவில்லை. இப்போது கேட்டதால் பேசுகிறேன்.
கிட்னி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் , சர்ஜன் மூன்று பேர், யூராலாஜி டாக்டர் ஒருவர், ஒரு மயக்க மருந்து டாக்டர் என, மொத்தம் 5 டாக்டர்கள் இருக்க வேண்டும்.
அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய, 15 முதல் 20 பேர் இருப்பர். ஒன்றியச் செயலரை வைத்து, கிட்னி அறுவை சிகிச்சை செய்ய முடியாது. முறையாக அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
கிட்னி கொடுப்பவர், வாங்குபவர் என, இருவரையும் மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டும். தாசில்தார், ஓய்வு பெற்ற நீதிபதி, டி.ஆர்.ஓ., போலீஸ் கமிஷனர், மதுரை மருத்துவக் கல்லுாரி டீன் ஆகியோர் உட்கார்ந்து, கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தருவர்.
ஒரு அறுவை சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வாங்குவோம்.
அவர்களுக்கு மருந்து செலவு, டாக்டர் கட்டணம் போக, எனக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். என் அப்பாவின் ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை, 14 கோடி ரூபாய்.
நாங்கள் செய்த மொத்த அறுவை சிகிச்சை 252. எனக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் தான் கிடைக்கும் என்றால், எப்போது ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவது? திருப்பட்டூர் ஊரில் உள்ள அனைவரின் கிட்னியை கழட்டினால் தான் வாங்க முடியும்.
சம்பாதிக்க ஆயிரம் வழி எனக்கு என்ன ஒரே வருத்தம் என்றால், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 252 பேரின் உயிரை காப்பாற்றி யிருக்கிறேன்.
இது குறித்து யாரும் பேசவில்லை. சொல்லப் போனால், கிட்னி அறுவை சிகிச்சையால் பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லை.
நான் மருத்துவக் கல்லுாரி நடத்துவதை, சேவையாக கருதி செய்கிறேன். சம்பாதிக் கிறதுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. எத்தனை கிட்னியை தான் உருவிக் கொண்டு வர முடியும்.
ஒரு மாதத்திற்கு ஐந்தாறு அறுவை சிகிச்சை தான் செய்வர். இப்போது தான் அதை ஆரம்பித்துள்ளோம்.
நான் தான் ஆரம்பிக்க சொன்னேன். மக்கள் பயன் பெறுகின்றனரே தவிர, எனக்கு ஒரு பயனுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.