சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது: விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய போலீஸ் உத்தரவு
சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது: விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய போலீஸ் உத்தரவு
UPDATED : ஆக 13, 2025 10:37 AM
ADDED : ஆக 13, 2025 04:25 AM

மதுரை: மதுரையில் ஆக., 21ல் நடக்கும் தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில், 'சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. ஜாதி, மத மோதலை துாண்டும் விதமாக பேசக்கூடாது' என்பது உட்பட 27 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
'மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்' என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர், தி.மு.க., அரசை விமர்சித்து பேசக்கூடாது என்பதற்காகவே, இப்படி நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக த.வெ.க.,வினர் கூறுகின்றனர்.
மதுரை பாரபத்தியில் ஆக., 21ல் த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம், 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
நிபந்தனைகள் விபரம் l மாநாட்டிற்கு வருபவர்கள் மதியம் 3:00 மணிக்குள் திடலுக்கு வர வேண்டும்
l யார் தலைமையில் வருகின்றனர் என்ற விபரத்தை போலீசிற்கு தெரிவிக்க வேண்டும்
l மாநாட்டு வளாகத்தில் பாதைகள் மேடு, பள்ளமாக இருக்கக்கூடாது
l விஜய் வந்து செல்லும் வழியில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
l கொடி, அலங்கார வளைவு, பேனர், பட்டாசுகள் போன்றவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதை தவிர்க்க வேண்டும்
l மாநாட்டிற்கு வரும் போதும், செல்லும் போதும் ஊர்வலமாக செல்லக்கூடாது
l நெடுஞ்சாலையிலும், அதன் இருபுறமும் பேனர், அலங்கார வளைவுகள், கொடி கம்பிகள் வைக்கக்கூடாது
l மாநாட்டில் கலந்து கொள்வோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது
l ஜாதி, மத மோதலை துாண்டும் விதமாக பேசக்கூடாது.
இப்படி, 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கு த.வெ.க., சார்பில் போலீசில் அனுமதி கேட்டபோது 'மேடையில் விஜய் மட்டுமே பேசுவார்' என தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில், போலீசார் 26வது நிபந்தனையாக, 'சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது' என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.