வேலை மாறினால் பி.எப்., கணக்கை தொழிலாளரே மாற்றி கொள்ளலாம்'
வேலை மாறினால் பி.எப்., கணக்கை தொழிலாளரே மாற்றி கொள்ளலாம்'
ADDED : ஜன 18, 2025 01:50 AM

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், வேலை மாறும்போது, பழைய அல்லது புதிய நிறுவனத்தின் உதவியின்றி, பி.எப்., கணக்கை தாங்களே மாற்றிக் கொள்ளலாம் என, இ.பி.எப்.ஓ., தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இ.பி.எப்.ஓ., கடந்த புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பி.எப்., கணக்கின் பிரத்யேக எண்ணான யு.ஏ.என்., பெற்றுள்ள சந்தாதாரர்கள், வேலை மாறினால், தங்கள் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்வது எளிதானது. புதிய நிறுவனங்கள் யு.ஏ.என்., பெற்று, மாதாந்திர பி.எப்., சந்தாவை செலுத்த துவங்கும்.
யு.ஏ.என்., உள்ள சந்தாதாரர்கள், தங்கள் பழைய நிறுவனத்தில் இருந்து பி.எப்., கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள, புதிய அல்லது பழைய நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பம் அனுப்ப வேண்டிய நடைமுறை முன்பிருந்தது. அது இனி தேவைப்படாது.
யு.ஏ.என்., வைத்துள்ள பி.எப்., சந்தாதாரர்கள், இணையதள வழியாக, தாங்களே விண்ணப்பித்து பி.எப்., கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரே யு.ஏ.என்., எண்ணில் புதிய நிறுவனம் துவங்கிய கணக்கு உட்பட பல கணக்குகள் இருந்தாலும், அவை ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், எளிதாக விண்ணப்பித்து கணக்குகளை ஒன்றிணைக்கலாம்.
ஆதார் எண்ணுடன் ஒரே யு.ஏ.என்., எண்ணில் இருந்து பல கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால், பி.எப்., இணையதள நடைமுறையே அடையாளம் கண்டு, அது ஒரே தனிநபர்தான் என்பதை உறுதி செய்து, நிறுவனத்தின் விண்ணப்பம் இல்லாமலே, பி.எப்., கணக்கு எண்களை ஒருங்கிணைத்து விடும்.
அக்டோபர் 2017க்குப் பின் பெறப்பட்ட யு.ஏ.என்.,களில் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம் ஆகியவை பொருந்தினால், புதிதாக பணியில் சேர்ந்த நிறுவனம் அல்லது பணியாற்றிய பழைய நிறுவனத்தின் விண்ணப்பம் தேவையின்றி, பி.எப்., கணக்குகளை தொழிலாளரே விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.