'முதல்வர் பேசினால் சட்டம்: அடுத்தவர் பேசினால் குற்றமா?'
'முதல்வர் பேசினால் சட்டம்: அடுத்தவர் பேசினால் குற்றமா?'
ADDED : டிச 22, 2024 01:58 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
அரசு அலுவலகங்களில், 'தமிழ் வாழ்க' என்று எழுதியதைத் தவிர, தி.மு.க., அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச் செய்த நன்மை என்ன?
தமிழ் வாழ்க என்று அரசு நிறுவனத்தில் எழுதி வைத்துவிட்டு, தனியார் நிறுவனங்களை தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்துவோரை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதற்காக போராடியோரை தமிழக அரசு கைது செய்கிறதென்றால், கடந்த பிப்., 8ல் வணிகர்களிடம் அதே கருத்தை வலியுறுத்திய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதனை, தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை?
கடந்த ஜூலை 23 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 'தமிழ் தெருவில் தமிழ் இல்லையென்று, இனி யாரும் குறைகூற முடியாத நிலையை உருவாக்க வேண்டும்' என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியென்றால், அவரை யார் கைது செய்வது?
அமைச்சரும், முதல்வரும் பேசினால் அது சட்டம்; அடுத்தவர் பேசினால் அது குற்றமா?
முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்பட தயாரிப்பு நிறுவனம், குடிநீர் நிறுவனம் உள்ளிட்ட எந்த வணிக நிறுவனத்தின் பெயரையாவது, தமிழில் வைத்துள்ளனரா? இதுதான் எந்தக் கொம்பனும் குறைகூற முடியாத திராவிட மாடல் ஆட்சியா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கன்னட மொழியிலேயே பெயர் பலகை வைக்க வேண்டுமென அம்மாநில அரசு தனிச்சட்டம் இயற்றியுள்ளது. அதை தீவிரமாகவும் நடைமுறைப்படுத்துகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டுமென்ற ஆட்சி மொழி சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவோரை, தமிழக அரசு கைது செய்து சிறைபடுத்தினால், அதைக் காட்டிலும் வேறு கொடுமை என்ன இருக்க முடியும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- நமது நிருபர் -.