தாமிரபரணி தண்ணீரை தேக்கி வைத்தால் பாசன நிலங்களை அதிகரிக்கலாமே ... செய்வார்களா?
தாமிரபரணி தண்ணீரை தேக்கி வைத்தால் பாசன நிலங்களை அதிகரிக்கலாமே ... செய்வார்களா?
ADDED : ஆக 27, 2024 11:05 AM

துாத்துக்குடி: பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் தண்ணீரை சேமித்து வைத்தாலும், அதன் துணை ஆறுகளில் இருந்து தாமிரபணி ஆற்றில் வெளியேறும் 13.8. டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சி பகுதியான சாத்தான்குளம், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்தார். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் என்ற பெயரில் நான்கு கட்டங்களாக பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில், பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறுகளும் இணைக்கப்படுகின்றன.
பாசன நிலங்கள் அதிகரிக்கும்
நெல்லை மாவட்டம் சாலைப்புதுார் குளத்துக்கு தண்ணீர் வந்துவிட்டால், நிலத்தடி நீர் அதிகரிக்கும். இதனால், சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் உப்புத் தன்மை குறையும். நல்ல தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்பதால், கூடுதல் நிலங்களில் விவசாயம் செய்ய வாய்ப்பு ஏற்படும். இப்பகுதிகளில் முருங்கை, தென்னை சாகுபடி தற்போது நடந்து வருகிறது. கூடுதலாக சாகுபடி நடைபெறும்போது, வறட்சி பகுதியாக கருதப்படும் அனைத்து இடங்களும் வளமை பெற வாய்ப்பு உள்ளது. தண்ணீர் உறுதியாக கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், ஆர்வத்துடன் கூடுதல் நிலங்களில் பாசனம் செய்யத் துவங்குவோம் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

