தனி சின்னத்தில் போட்டியிட்டால் 3 'சீட்' தான்; தி.மு.க., நிபந்தனையால் வைகோ 'அப்செட்'
தனி சின்னத்தில் போட்டியிட்டால் 3 'சீட்' தான்; தி.மு.க., நிபந்தனையால் வைகோ 'அப்செட்'
UPDATED : மார் 02, 2026 05:25 AM
ADDED : மார் 02, 2026 05:24 AM

- நமது நிருபர் -
கூடுதல் தொகுதிகள், ராஜ்யசபா 'சீட்' என எதற்கும் தி.மு.க., பிடி கொடுக்காததால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் போட்டி யிட்டு, நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு குழுவினரை, ம.தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு குழுவினர் சமீபத்தில் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேசினர்.
அப்போது, ' வைகோவிற்கு ராஜ்யசபா சீட், சட்ட சபை தேர்தலில் 12 தொகுதிகள் வழங்க வேண்டும்' என, ம.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தி.மு.க., ஏற்கவில்லை. 'ராஜ்யசபா 'சீட்' கிடையாது. தனி சின்னத்தில் போட்டியிட்டால் மூன்று தொகுதிகள்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் நான்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்' என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை அறிந்த வைகோ அதிருப்தி அடைந்தார்.
ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்த வைகோ, தி.மு.க., கூட்டணியில் தான் நெருக்கமாக இருப்பதை உணர்த்த , தன் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலினை அழைத்தார். மேலும், பார்லிமென்டில் தான் பேசிய பேச்சுக்களை புத்தகமாக தயார் செய்து, முதல்வரிடம் அணிந்துரை கேட்டார். இந்நிலையில், ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டது, அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை ஆதரவாளர் சத்தியகுமாரன் வெளியிட்ட அறிக்கை: ஈரத்துண்டை போட்டு கழுத்தறுத்து, இன்றும் நம்பிக்கை துரோகம் செய்யும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தி.மு.க.,விலிருந்து உடனே வெளியேறுங்கள். 2019 லோக்சபா தேர்தலில், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வாயிலாக, மறைந்த கணேசமூர்த்திக்கு நெருக்கடி தந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தனர்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், செத்தாலும் தனி சின்னத்தில் தான் ம.தி.மு.க., போட்டியிடும் என அறிவித்த துரையால் ம.தி.மு.க., பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போது, அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு தான் , இந்த வினாடி வரை பாலும் , பாயசமும் கொடுத்து, நம் குழந்தைகளுக்கு வெறும் பச்சை தண்ணீர் மட்டும் கொடுக்கின்றனர்.
இதை, ம.தி.மு.க., தொண்டர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நிலத்தில் 1,000 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை சுவாசிக்கும் ஆல மரத்தை ஒரு போதும் சாய்த்துவிட முடியாது. அதுபோல் , ஒரு போதும் எங்களை அழித்துவிட முடியாது. வைகோ உடனே முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

