எங்களிடம் சொன்னால் குறைந்து போய் விடுவீர்களா?: துரைமுருகனிடம் மல்லுக்கட்டும் செல்வப்பெருந்தகை
எங்களிடம் சொன்னால் குறைந்து போய் விடுவீர்களா?: துரைமுருகனிடம் மல்லுக்கட்டும் செல்வப்பெருந்தகை
ADDED : அக் 26, 2025 01:10 AM

சென்னை: ''எங்களிடம் இருக்கும் கோவணம் சுயமரியாதை மட்டும் தான். அதையும் விட்டு விட வேண்டுமா,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது.
கடும் சாடல் இத்தகவல் அறிந்ததும், அங்கு சென்ற அத்தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை, 'ஏரியில் தண்ணீர் திறக்கப்படும் தகவலை, என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை' என, அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
அப்போது, 'பொதுப்பணித் துறையில் ஒரு அயோக்கியன் உட்கார்ந்திருக்கிறான். வெறிப் பிடித்துபோய் இருக்கிறது இத்துறை. ஏரி திறப்பதை தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு சொன்னால் குறைந்து போய் விடுவீர்களா' என, கடுமையாக சாடினார்.
அவர் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. 'பொதுப்பணித் துறையில் ஒரு 'அயோக்கியன்' இருப்பதாக யாரைச் சொல்கிறார் செல்வப்பருந்தகை' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியது.
இதற்கு நேற்று முன்தினம் ராணிப்பேட்டையில் பேட்டியளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், 'செல்வப்பெருந்தகை போன்ற அரசியல் கட்சித் தலைவர், இப்படி சொன்னதற்காக வருத்தப்படுகிறேன்.
'உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும். பருவ மழை முடிந்து, மீண்டும் பருவமழை துவங்கும்போது, மேட்டூர் அணை நிரம்பியிருந்தால் தான் முதல்வர் நேரில் சென்று திறப்பார். மற்ற காலங்களில் அங்கிருப்பவர்கள் தான் திறப்பர்' என்றார்.
சுயமரியாதை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று, செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
பொறுப்புள்ள, மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்னை கேட்டுவிட்டுதான், செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க வேண்டும் என சொல்லவில்லை. திறப்பதற்கு முன், தகவல் சொல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்; இதை கேட்பதே தவறா?
அதிகாரிகளை கேள்வி கேட்பதைக்கூட, அமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு இருக்கும் கோவணமே சுயமரியாதைதான்; அதைகூட விட்டுவிட வேண்டுமா?
'ஏரி திறப்பை எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு சொல்வது கட்டாயம் அல்ல' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியெனில், மக்கள் பிரதிநிதிகளை விட, அதிகாரிகள் மேலானவரா?
வருத்தம் ஸ்ரீபெரும்புதுாரில் நகராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இருவர் ஆகியோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
'செம்பரம்பாக்கம் ஏரி திறக்கும்போது, ஏன் அழைக்கவில்லை. பட்டியல் இனத்தைச் சேர்ந்தோர் என்பதால் அழைக்கவில்லையா?' என, அவர்கள் கேட்கின்றனர். இதுதான் பிரச்னையே.
அதிகாரிகளுக்கு ஆதரவாக மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசுவதும், தவறு செய்து விட்டு, அதை நியாயப்படுத்துவதும் வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

