கை செயலிழப்பு சிகிச்சைக்கு 'ரோபோ' : ஐ.ஐ.டி., - சி.எம்.சி., உருவாக்கம்
கை செயலிழப்பு சிகிச்சைக்கு 'ரோபோ' : ஐ.ஐ.டி., - சி.எம்.சி., உருவாக்கம்
ADDED : ஜன 18, 2025 01:25 AM

சென்னை: கை செயலிழப்பு சிகிச்சைக்கு உதவுவதற்காக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் வேலுார் கிறிஸ்தவ மருத்துவ கல்லுாரி இணைந்து, 'புளூட்டோ' எனப்படும், ரோபோ கருவியை உருவாக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், தண்டுவட மரப்புநோய், பார்கின்சன் நோய், அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றோருக்கு, கை செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அவ்வாறு பாதிக்கப்படும் கையை, மீண்டும் இயங்க வைக்க அளிக்கப்படும் சிகிச்சைக்கு உதவ, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயந்திர பொறியியல் துறை, வேலுார் சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியின் உயிரி பொறியியல் துறை இணைந்து, 'புளூட்டோ' என்ற ரோபோ கருவியை உருவாக்கி உள்ளன.
சென்னை ஐ.ஐ.டி.,யின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறியதாவது:
இந்த ரோபோ கருவியை, அரவிந்த் நேருஜி, சிவகுமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் உருவாக்கி உள்ளனர். பொதுவாக கையின் மணிக்கட்டு நெகிழ்வுத்தன்மை இழப்பது, நீட்சி அடையாதது, முன்கை நீட்டல் மற்றும் மடக்கல் தன்மை இழப்பது உள்ளிட்ட காரணங்களால், கைகள் செயல்படாத நிலைக்கு செல்லும்.
இந்நிலையில் இருந்து, மீண்டும் பழையபடி கைகளை இயக்க, பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறான சிகிச்சையின் துல்லியத்தன்மையை அதிகரிக்க, இந்த ரோபோ கருவி உதவியாக இருக்கும். இதை, மறுவாழ்வு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தலாம்.
இது, மிகவும் சிறியதாக இருப்பதால், ஏற்கனவே, 11 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 1,000க்கும் மேற்பட்டோரின் கை செயல்பாடுகளை மீட்க வாங்கப்பட்டுள்ளன.
இதில் பயன்படுத்தப்படும் கருவிகள், மறுசுழற்சி செய்யும் வகையிலானவை என்பதால், விலையும் குறைவாக உள்ளது. இது, படுக்கையில் இருப்போரும், சக்கர நாற்காலியை பயன்படுத்துவோரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.