'ஹைப்பர்லுாப்' சோதனை தடம் தயார்: சாதித்து காட்டியது சென்னை ஐ.ஐ.டி.,
'ஹைப்பர்லுாப்' சோதனை தடம் தயார்: சாதித்து காட்டியது சென்னை ஐ.ஐ.டி.,
UPDATED : பிப் 26, 2025 05:05 AM
ADDED : பிப் 26, 2025 02:21 AM

புதுடில்லி: போக்குவரத்து துறையில் புதிய புரட்சி என்று கூறப்படும், 'ஹைப்பர்லுாப்' ரயில்களை இயக்குவதற்காக, நாட்டிலேயே முதல் சோதனை தடத்தை, சென்னை ஐ.ஐ.டி., தயார் செய்துள்ளது. விரைவில் இதில் ரயிலை இயக்கி சோதிக்கப்பட உள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ஹைப்பர்லுாப் ரயில்களை இயக்குவது தொடர்பான ஆராய்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் ஈடுபட்டுள்ளது. தற்போது சென்னைக்கு அருகே உள்ள தையூரில் அதன் வளாகத்தில், 422 மீட்டர் நீளத்துக்கு, ஹைப்பர்லுாப் ரயில் இயக்குவதற்காக சோதனை தடம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் இதில் ஹைப்பர்லுாப் ரயில் இயக்கி சோதிக்கப்பட உள்ளது. இதை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிதாக வளர்ந்து வரும் ஹைப்பர்லுாப் தொழில்நுட்பத்தில், புதிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். சென்னை ஐ.ஐ.டி., தன் வளாகத்தில், 422 மீட்டர் நீளத்துக்கான சோதனை தடத்தை அமைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக இரண்டு கட்டங்களாக, தலா, 8.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டமாக 8.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, 350 கி.மீ., துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும். எதிர்கால போக்குவரத்து மேம்பாட்டுக்காக, கல்வி நிறுவனத்துடன் அரசு இணைந்து இதை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையில் இருந்து திருச்சிக்கான, 330 கி.மீ., துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும். தற்போது ரயிலில் 6 மணி நேரமும், விமானத்தில், 1 மணி நேரத்துக்கும் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
![]() |