அதிகாரிகளுக்கு சிறை, அபராதம் விதிப்பு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
அதிகாரிகளுக்கு சிறை, அபராதம் விதிப்பு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
UPDATED : ஜூன் 02, 2025 07:51 AM
ADDED : ஜூன் 02, 2025 05:53 AM

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார் பாட்டீல் உட்பட, எட்டு அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனை மற்றும் அபராதத்துக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த முதியவர் ஜான் சாண்டிக்கு, சொந்தமான நிலத்தின் பட்டா ஆவணத்தில், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட இருவரின் பெயரை நீக்க வேண்டும் என, 2023ம் ஆண்டு நவம்பர், 8ல், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை, குறித்த காலத்தில் அமல்படுத்தவில்லை எனக்கூறி, ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த காலத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவில்லை,'' எனக் கூறி, கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார் பாட்டில், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, ஆர்.டி.ஓ., பி.கே. கோவிந்தன் ஆகியோருக்கு, தலா 10,000 ரூபாய் அபராதம், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல் ஆகியோருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு மாத ஊதியத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.
இதேபோல, மேலும் இரு வழக்குகளில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன், கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் ஏ.சத்யன், வெள்ளலூர் வி.ஏ.ஓ., விஜயகுமார் ஆகியோருக்கு, தலா ஒரு மாதம் சிறை, தலா 25,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கோவை முன்னாள் கலெக்டர் உள்பட எட்டு அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனுக்கள் நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தன. அதிகாரிகள் தரப்பில், 'உயர் நீதிமன்ற உத்தரவை தாமதமாக அமல்படுத்தியதாக கூறி, தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.