ஹிந்து கோவில்களுக்கு 10 சதவீத வரி விதிக்கும் மசோதா: கர்நாடக சட்ட மேலவையில் தோல்வி
ஹிந்து கோவில்களுக்கு 10 சதவீத வரி விதிக்கும் மசோதா: கர்நாடக சட்ட மேலவையில் தோல்வி
UPDATED : பிப் 24, 2024 11:37 AM
ADDED : பிப் 24, 2024 04:43 AM

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிந்து கோவில்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு, பக்தர்களும், ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த மசோதா சட்ட மேலவையில் தோல்வியடைந்தது.
கர்நாடகா சட்டசபையில் நேற்று முன்தினம், 'கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவில்களிடம் இருந்து, 10 சதவீத தொகையும், 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள கோவில்களில் இருந்து 5 சதவீத தொகையும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தோல்வி
இதனிடையே, இந்த மசோதா மீது நேற்று சட்ட மேலவையில் ஓட்டெடுப்பு நடந்தது. இந்த அவையில் அம்மாநில ஆளும் காங்கிரசுக்கு 30 எம்எல்சி.,க்களும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கு 38 எம்.எல்.சி.,க்களும், மஜத.,வுக்கு ஒரு எம்எல்சி.,யும், சுயேச்சை ஒருவரும் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த இந்த அவையில் கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 தோல்வியடைந்தது. இது முதல்வர் சித்தராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, ''ஹிந்து கோவில் வருமானத்தைக் கொண்டு காங்கிரஸ் அரசு தன் கஜானாவை நிரப்பப் பார்க்கிறது. ''ஹிந்துக்களுக்கு எதிரான கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, ஹிந்து கோவில் வருமானத்தை வேறு ஏதோ காரணத்திற்காகப் பயன்படுத்த உள்ளது. ''கடவுளுக்காகவும், கோவில் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை கோவில் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். அப்படியே கோவில் நிதியை எடுப்பதாக இருந்தால் அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். ஹிந்து கோவில்களில் இருந்து மட்டும் வசூலிப்பது ஏன்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, ''ஹிந்து கோவில்களில் இருந்து பெறப்படும் நிதி, ஹிந்து கோவில்களின் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்,'' என கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டத் திருத்தத்திற்கு பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வேதாந்தம், - விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர்: காங்கிரஸ் ஆட்சி எப்போது ஆரம்பித்ததோ, அப்போதே ஹிந்துக்களுக்கு எதிரான செயலை படிப்படியாக செய்து வருகிறது. வல்லபபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் காலத்தில் இதனை எதிர்த்தனர். தற்போது, எதிர்ப்பதற்கு யாரும் இல்லை. கர்நாடகாவில் ஹிந்து கோவில்களை குறிவைத்து பணம் பறிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. காங்., அரசுக்கு நிதி நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக கோவில் பணத்தில் கை வைக்க பார்க்கின்றனர். ஹிந்துக்களின் கோவில்களை விட சர்ச், மசூதிகளுக்கு பணம் வருகிறது. அதை ஏன் வாங்க மறுக்கின்றனர். இவர்களின் நோக்கம் ஹிந்து மதத்திற்கு மட்டும் கெடுதல் நினைப்பதுதான்.
டி.ஆர்.ரமேஷ், - ஆலய வழிபடுவோர் சங்கம்: கர்நாடகாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஹிந்து கோவில்களில் இருந்து அதன் மொத்த நிதியில் 10 சதவீதத்தை, அறநிலையத்துறை பொதுநல நிதிக்கு கட்டாயமாக வசூலிக்க உள்ளனர். தமிழகத்தில் இதற்காக சட்டம் இல்லை என்றாலும், இங்கும் 5 முதல் 10 சதவீதம் வரை வசூலிக்கின்றனர். இது சட்ட விரோதமானது. இப்படி கோவில் நிதியை எடுப்பதால் அந்தந்த கோவில்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இதற்கு கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசின் புதி சட்டத்தை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத்தின் சார்பில் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். கர்நாடகாவிலும் பல்வேறு அமைப்பினர் வழக்கு தொடுக்க உள்ளனர்.
அர்ஜுன் சம்பத்-, ஹிந்து மக்கள் கட்சி தலைவர்: கோவில்களுக்கு சொத்துக்கள் மற்றும் உண்டியல் வாயிலாக வருவாய் வருகிறது. அதன் வாயிலாக கோவில் நித்திய பூஜைகள், விசேஷங்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே, கோவில் சொத்துக்களை குத்தகை எடுத்தவர்கள் உரிய தொகை செலுதாமல் ஏமாற்றுகின்றனர். இந்நிலையில் கோவில் மொத்த வருமானத்தில்,10 சதவீதம் வாங்குவது ஏற்புடையதல்ல. கோவில்கள் வியாபார தலம் இல்லை. கர்நாடகாவில் காங்., ஆட்சிக்கு வந்த பிறகு மசூதி, சர்ச் பராமரிப்பிற்கு என, பல நுாறு கோடி ரூபாய் சிறு பான்மையினருக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், ஹிந்து கோவில்களுக்கு எதுவும் ஒதுக்காமல் அங்கிருந்து பணத்தை எடுப்பது ஹிந்து விரோத போக்கையே காட்டுகிறது.
நல்ல நோக்கத்தை திசை திருப்புகிறது
ஆ.கோபண்ணா, ஊடக பிரிவு தலைவர், தமிழக காங்கிரஸ்: ஹிந்து கோவில்களை திறம்பட நிர்வாகம் செய்யும் நல்ல நோக்கத்துடன்தான், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள கோவில் நிதியிலிருந்து 10 சதவீதம், கர்நாடக ஹிந்து சமய அறநிலையத்துறையின் பொதுநல நிதிக்கு பெறப்படுகிறது. இது புதிய சட்டம் அல்ல. ஏற்கனவே இருந்த 5 சதவீதம் 10 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிதி முழுவதும் அறநிலையத்துறை வாயிலாக, ஹிந்து கோவில்கள் மேம்பாடு, அர்ச்சகர்களுக்கான ஊதியம், பக்தர்களுக்கான வசதிகள், கோவில்கள் வாயிலாக நடக்கும் பல்வேறு பணிகளுக்காகவே பயன்படுத்தப்பட உள்ளது. இதை கர்நாடக முதல்வர் சித்தராமையா தெளிவுப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த உண்மைகளை மறைத்து கோவில் நிதி, மாநில அரசின் கஜானாவுக்கு செல்வது போன்று திசை திருப்பும் பிரசாரத்தை பா.ஜ., செய்து வருகிறது. ஆனால், கர்நாடக மக்கள் உண்மையை அறிவார்கள் என்பதால், பா.ஜ.,வுக்கு பாடம் கற்பிப்பர்.
எஸ்.ராமன், கோடம்பாக்கம், சென்னை: ''கோவில்கள் வருமானம் ஈட்டுவதாக கூறுவதே தவறு. பக்தர்கள் காணிக்கை செலுத்துவது, கோவில்களின் மேம்பாட்டுக்கு தானே தவிர, அரசின் கஜானாவை நிரப்புவதற்கு அல்ல. ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கோவில்கள், அதில், 10 சதவீதம் தொகையை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என, கர்நாடக அரசு அறிவித்து இருப்பது அபத்தம். இந்து கோவில்களுக்கு வரி உயர்வு செய்து இருக்கும் அம்மாநில அரசு, சர்ச் மற்றும் மசூதிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளாதது ஏன்; அங்கு கோடிகளில் குவிகிறதே, முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியாமல் போனது ஏன்; அவரது செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தலில் அரசு தக்க பாடம் புகட்டுவர்.

