பள்ளி விஷயத்தில் அண்ணாமலைக்கு தமிழக அரசு மழுப்பலான பதில்
பள்ளி விஷயத்தில் அண்ணாமலைக்கு தமிழக அரசு மழுப்பலான பதில்
UPDATED : பிப் 20, 2025 04:25 AM
ADDED : பிப் 19, 2025 07:14 PM

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, முழுமையான புள்ளிவிபரங்களை வெளியிடாமல், 'தமிழகத்தில் 3.16 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே, ஹிந்தி கட்டாய பாடமாக உள்ளது' என தெரிவித்துள்ளது.
'தேசிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு ஏற்றால்தான், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தர வேண்டிய, 2,152 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு வழங்கும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், மும்மொழிக் கொள்கையை ஏற்பதாகி விடும் என்பதால், மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக, தி.மு.க., பிரசாரம் செய்து வருகிறது.
அதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.,வினர், 'ஹிந்தி படி என, மத்திய அரசு கூறவில்லை. மூன்றாவதாக ஏதேனும் ஒரு மொழியை கற்கும்படியே, தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது' என விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:
தனியார் பள்ளிகளில் படிக்கும், தி.மு.க.,வினரின் குழந்தைகள் மட்டும், மூன்று மொழிகள் கற்கலாம். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசு பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்?
தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். தனியார் பள்ளிகளில், 56 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், தமிழ் மொழி என்பது கட்டாயம் அல்ல. தெலுங்கு, அரபு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பிரெஞ்சு, உருது போன்ற மொழிகள் உள்ளன.
தமிழகத்தில், 56 லட்சம் மாணவர்கள், வேறோரு திட்டத்திற்கு போய் கொண்டிருக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும், 52 லட்சம் மாணவர்களை மட்டும், கட்டாயமாக இரு மொழிகளை படிக்க வேண்டும் என்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்து, தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், 56 லட்சம் மாணவர்களில், குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும்போது, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும், 52 லட்சம் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடாதா என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார். இதற்கு எந்த தரவும் இல்லை.
தமிழகத்தில் கட்டாய மொழித் திணிப்பை எதிர்க்கும் நமது அரசு, விரும்பியதைப் படிக்க, எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவ்வகையில் தனியார் கல்வி நிலையங்களில், ஹிந்தி கட்டாயம் என்ற சூழல் இல்லை.
தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை, சுமார் 58,000. அதில் தனியார் பள்ளிகள் சுமார் 12,690. இதில் சி.பி.எஸ்.சி., பள்ளிகள் வெறும் 1,835 தான். சி.பி.எஸ்.சி., பள்ளிகள் தவிர, கட்டாய ஹிந்திப் பாடம் எங்கும் இல்லை.
பிற தனியார் பள்ளிகளில், எந்தப் பொதுத் தேர்விலும் ஹிந்தி கிடையாது. நிலைமை இப்படி இருக்க, பல லட்சம் மாணவர்கள் ஹிந்தி படிப்பதாக, மனம் போன போக்கில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என, தவறான கருத்தை பரப்ப முயல்வது தவறு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகள், ஐ.சி.எஸ்., பாடத்திட்ட பள்ளிகள், மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் எவ்வளவு உள்ளன; ஒவ்வொன்றிலும் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர் என்ற விபரங்கள், தமிழக அரசிடம் உள்ளன. அவற்றை தகவல் சரி பார்ப்பகம் வெளியிடவில்லை.
சி.பி.எஸ்.சி., பள்ளிகள் எண்ணிக்கையை கூறிய அரசு தரப்பு, அதில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர் என்ற விபரத்தை, தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே, அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல், 'தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழி கற்கலாம்; அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக்கூடாது என்பது நியாயமா' என்ற அண்ணாமலையின் கேள்விக்கும், அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

