ஆளும்கட்சியில் கோஷ்டி கானம் ஒலிக்குது! 'செக்போஸ்டில்' வசூல் பட்டைய கிளப்புது...
ஆளும்கட்சியில் கோஷ்டி கானம் ஒலிக்குது! 'செக்போஸ்டில்' வசூல் பட்டைய கிளப்புது...
UPDATED : மார் 19, 2024 05:19 AM
ADDED : மார் 19, 2024 12:04 AM

சித்ராவின் வீட்டு, 'காலிங்பெல்' ஒலிக்க, கதவை திறந்தாள் சித்ரா. ''அப்பப்பா என்ன வெயில். இப்பவே இந்த போடு போடுதே; இனி, அக்னி நட்சத்திரம் வெயில் துவங்குச்சுன்னா, எப்படிதான் சமாளிக்கிறதோ...'' என, புலம்பியபடியே, வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, சோபாவை ஆக்கிரமித்தாள்.
''எலக்ஷன் அறிவிச்சுட்டாங்க. இனி, ஊரே விழாக்கோலமாத்தான் இருக்கப்போகுது'' என, டீபாய் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய படியே, உற்சாகமானாள் மித்ரா.
''ஆமா மித்து. நம்ம ஸ்டேட்ல, முதல் கட்டத்துலயே 'எலக்ஷன்' நடத்தி முடிச்சுடறாங்க; ஒரு மாசம் தான், 'பிஸி' இருக்கும். அதனால, பெரிசா பரபரப்பு இருக்காதுன்னும் பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''இதுல, ஆளுங்கட்சிக்காரங்க, ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்காதவங்களுக்கு வாங்கித்தர்றதா சொல்லி, பெண்களின் ஓட்டுகளை 'கேன்வாஸ்' செஞ்சுட்டு இருக்காங்க'' என்றாள் மித்ரா.
பேராசை பெருநஷ்டம்
''உரிமைத்தொகை விவகாரத்துல நடந்த ஒரு கூத்தை சொல்றேன் கேளு மித்து,'' என்ற சித்ரா தொடர்ந்தாள்.
''திருப்பூர் சவுத்ல, ஒரு வீட்டில குடும்பத்தலைவி நாலு மாசமா உரிமைத்தொகை வாங்கிட்டு இருந்தாங்களாம். இதனை கவனிச்ச அவங்களோட மருமகளுக்கும், உரிமைத்தொகை வாங்கணும்ன்னு ஆசை வர, இ-சேவை மையத்துக்கு போய் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிச்சாங்க...''
''திடீர்ன்னு அந்த குடும்பத்தலைவிக்கு வந்துட்டு இருந்த உரிமைத்தொகை நின்னு போச்சாம். இ- சேவை மையத்துக்கு போய் அந்தம்மா விசாரிச்சு பார்த்ததுல, 'உங்க குடும்பத்துல இருக்கற இன்னொரு பெண், உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிச்சிருக்காங்க; அதனால தான் உங்களுக்கான உரிமைத் தொகையை ரத்து பண்ணிட்டாங்கன்னு,' சொல்லியிருக்காங்க, இ-சேவை மைய ஊழியர்கள்''
''யாரு விண்ணப்பிச்சிருக்காங்கன்னு, அந்தம்மா கேட்க, அவங்க மருமகள் பெயரை சொல்லியிருக்காங்க, அப்படியே 'ஷாக்' ஆன அந்தம்மா, 'அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன் பாரு; எனக்கு வந்துட்டு இருந்த பணத்தை நிறுத்திட்டாளே''ன்னு செம கடுப்புல போயிட்டாங்களாம். இதுல, இன்னொரு காமெடி என்னென்னா, 'உங்க வீட்ல ஏற்கனவே ஒருத்தருக்கு உரிமைத்தொகை வந்துட்டு இருக்குன்னு சொல்லி, அந்த மருமகள் கொடுத்த விண்ணப்பத்தையும் நிராகரிச்சுட்டாங்களாம்'' எனக் கூறி சிரித்தாள் சித்ரா.
''இதனைத் தான் பேராசை பெரு நஷ்டம்ன்னு சொல்லுவாங்களோ...'' என, பதிலுக்கு சிரித்த மித்ரா, அரசியல் மேட்டருக்கு தாவினாள்.
ஆள் மாறாட்டம்!
''தி.மு.க., தெற்கில் கோஷ்டி பூசல் ரொம்ப அதிகமாகிடுச்சாம். பொதுக்கூட்ட மேடையிலயே முக்கிய நிர்வாகிங்க சண்டை போட்டுக்குறாங்களாம். நகர நிர்வாகிங்க வச்சிருந்த, 'பிளக்ஸ் பேனரை', அதிருப்தி கோஷ்டியே கிழிச்சு எறியற அளவுக்கு நிலைமை இருக்குதுன்னா பார்த்துக்கோயேன். அவிநாசி, பல்லடம்ன்னு தெற்கு பகுதியிலேயும் இதே நிலைமை தான். இப்படியிருந்த எலக் ஷன் வேல எப்படி பார்ப்பாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''பல்லடம்ன்னு சொல்லவும் தான், எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அங்க இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல வேல பார்க்குற ஒரு ஆபீசர், எந்நேரமும் போதையில தான் இருக்காராம்; அதனால, அவர் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம், மத்தவங்க செய்ய வேண்டியிருக்காம்,''
''அங்க தேவராயம்பாளையம்ங்கற ஒரு ஊர்ல, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துல ஒரு 'லைப்ரரி' கட்டியிருக்காங்க; அதோட 'லைப்ரரியன்', அங்க போறதே இல்லையாம். அவங்களுக்கு பதிலா, அந்ந ஊர்ல இருக்கற வேற ஒரு லேடியை வேலைக்கு வைச்சு, தன்னோட சம்பளத்துல இருந்து தினக்கூலி மாதிரி ஒரு 'அமவுன்ட்' கொடுத்துட்டு இருக்காங்கன்னும் பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''பரவாயில்லையே; அரசாங்க சம்பளம் வாங்கி, அதுல கூலிக்கு ஆள் வைச்சு வேல வாங்கறது பெரிய விஷயம் தான்; ''இப்பெல்லாம் அரசாங்க வேல கிடைக்கிறதே கஷ்டம்; அதுல, இப்படி வேற பண்றாங்களா... அதிகாரிங்க விசாரிச்சாத்தான் உண்மை என்னென்னு தெரிய வரும்,'' என ஆதங்கப் பட்டாள் சித்ரா.
''இதே மாதிரி தான், 'டிரான்ஸ்போர்ட்'லேயும், சில 'தில்லாலங்கடி' வேலையெல்லாம் நடக்குதாம். உதாரணமா, திருப்பூர்ல இருந்து ஈரோட்டுக்கு பயண நேர அட்டவணைப்படி, பஸ் இயங்கறதே இல்லையாம். குறைச்சலா தான் இயக்குறாங்களாம். என்ன காரணம்னு விசாரிச்சா, ஈரோட்டுக்கு ஒன்னு, ரெண்டு 'டிரிப்' மட்டும் பஸ் இயக்கிட்டு, மத்த 'டிரிப்'களை வேற ஊருக்கு இயக்கிடறாங்களாம்,''
''இதனால, 'பிரைவேட்' பஸ்களுக்கு ஆதாயமாம். அரசு பஸ்சுக்காக காத்திருக்கிற பயணிகளை 'பிரைவேட்' பஸ்காரங்க, 'கவர்' பண்ணிடறாங்களாம். இந்த விவகாரத்துல, 'டிரான்ஸ்போர்ட்' அதிகாரிங்க, டிரைவர், கண்டக்டர்களும் ஆதாயம் அடையறாங்கன்னு, தோழர் கட்சி யூனியன் கிளப்பி விட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
அ.தி.மு.க.,வின் கணக்கு
''ஒரு நிமிஷம் மித்து. லெமன் ஜூஸ் கலக்கி எடுத்து வர்றேன்; வெயிலுக்கு நல்லா இருக்கும்,'' என்றபடியே, சமையலறைக்குள் நுழைந்த சித்ரா, சில நிமிடத்தில் ஜில்லென்று லெமன் ஜூஸ் எடுத்து வந்தாள்.
''நம்ம திருப்பூர் தொகுதியில, அ.தி.மு.க., வேட் பாளர் தேர்வுல மாற்றம் இருக்கும்ன்னு பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா தொடர்ந்தாள். ''வெயிட்டான வேட்பாளரை நிறுத்துனாதான், சரியா வரும்னு, அந்த கட்சித்தலைமை 'கணக்கு' போட்டிருக்காம். அதனால 'சிவ'மயமான 'மாஜி'க்கு கூட வாய்ப்பு வரும்ன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''பார்த்து மித்து, எங்க போனாலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல கையில காசு எடுத்துட்டு போகாத; 'எலக்ஷன்' விதி நடை முறைல இருக்கறதால, அதிகாரிகளும், போலீஸ்காரங்களும் அங்கங்க சோதனை பண்றாங்க'' என'அலர்ட்' செய்தாள் சித்ரா.
''நீங்க சொல்றது 'கரெக்ட்' தான்; இருந்தாலும், மாவட்ட எல்லையான தாராபுரத்துல, வாகன சோதனையில போலீஸ்காரங்க ஈடுபடறாங்களாம். அளவுக்கதிகமா லோடு ஏத்திட்டு வர்ற லாரிக்காரங்க, 'செக்போஸ்ட்' பக்கம் வர வரவே கையில, 50 ரூபாய் நோட்டை எடுத்து 'ரெடி'யா வைச்சிருக்கறாங்களாம். பக்கத்துல வந்ததும், போலீஸ்காரங்க கையில அந்த நோட்டை அவங்க திணிச்சுட்டு, போய்ட்டே இருக்காங்களாம். இப்படியெல்லாம் கூட, நிறைய இடங்கள்ல 'செக்' பண்றாங்க,'' என சிரித்தாள் சித்ரா.
''லோக்சபா தேர்தல்களம் அனல் பறக்குற நேரத்துல, கட்சியோட ஒன்றிய செயலாளரு பதவிக்கு ஆளாளுக்கு அடிச்சுக்கிறாங்களாம்,'' என, மித்ரா அங்கலாய்த்தாள்.
''மித்து எந்த கட்சியில, எங்கே நடக்குது இந்த கூத்து...''
''அவிநாசியில தான். அ.தி.மு.க.,வுல தெற்கு ஒன்றியத்துல முக்கிய பொறுப்பு காலியா இருக்காம். 'சீனியர்'ங்கற அடிப்படையில தான் பதவி கொடுக்கணுமாம்; இதுல, ரெண்டு பேருக்கிடையே தான் கடும் போட்டியாம்,'' என்ற மித்ரா, ''பக்கத்துல இருக்கற வேலாயுதம்பாளையத்துல, கிராம அதிகாரியோட 'அசிஸ்டென்ட்' ஒருத்தரு, கிராம அதிகாரியோட 'சீட்'ல உட்கார்ந்து வேலை பார்த்துட்டு இருந்திருக்காரு,''
''அங்க பட்டா மாறுதல் சம்மந்தமான வேலைக்காக வந்த ஒருத்தரு, 'நீங்க தான் கிராம அதிகாரியா?'ன்னு கேட்க, அவரும் தலையாட்டியிருக்காரு. விண்ணப்பத்தோட, 'கவனிப்பை'யும் கொடுத்துட்டு போயிருக்காரு அந்த நபரு. இந்த விஷயம் கிராம அதிகாரிக்கு தெரிய வர, உதவியாளருக்கு செம அர்ச்சனையாம்,'' என்றாள் சித்ரா.
''என்னமோ போங்க்கா...'' என சலித்துக் கொண்ட மித்ரா, தன் வீட்டுக்கு புறப்பட்டாள்.

