வருமான வரித்துறை அதிரடி; அரசு பள்ளிகளுக்கு அபராதம்
வருமான வரித்துறை அதிரடி; அரசு பள்ளிகளுக்கு அபராதம்
ADDED : அக் 26, 2024 06:11 AM

மதுரை : தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி வாரியாக ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
பிடித்தம் செய்யப்படும் தொகையை, பள்ளிகளுக்கு என வழங்கப்பட்டுள்ள பிரத்யேக, 'டான்' எண் மூலம், வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இது தவிர, மார்ச் 31க்கு பின், வருவாய் ஆண்டுக்கான முழு வருமான வரித் தாக்கல் விவரமும் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், 2014 முதல், 2024 வரை 'டான்' எண்களில் இருந்து வருமான வரி 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ய, பெரும்பாலான பள்ளிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கான தாமதக் கட்டணத்தை செலுத்த, வருமான வரித்துறை சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தாமதக் கட்டணத்தை செலுத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பின் போது, பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது அரசு அலுவலகங்கள், 'டான்' எண்கள் மூலம் தாக்கல் செய்ய வேண்டியதில், பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகும் தாமதம் தொடர்ந்தது.
அதுபோல, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையை, அரசு, உரிய நேரத்தில் ஐ.டி.,க்கு செலுத்தாததால், ஆசிரியர்கள் என்ன தான் உரிய நேரத்தில் 'ரிட்டர்ன்' தாக்கல் செய்தாலும், அது தாமதமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாமத தொகையை தலைமையாசிரியர்கள் செலுத்த கட்டாயப்படுத்துவதை தவிர்த்து, தள்ளுபடி செய்ய அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.