மத்திய அரசின் நிதி உதவியால் தமிழகத்தில் மீன் உற்பத்தி அதிகரிப்பு
மத்திய அரசின் நிதி உதவியால் தமிழகத்தில் மீன் உற்பத்தி அதிகரிப்பு
UPDATED : ஆக 28, 2024 05:00 AM
ADDED : ஆக 28, 2024 01:07 AM

'தமிழகத்தில் கடந்த 2020 - -21ம் ஆண்டு, 7.23 லட்சம் டன் அளவுடன் இருந்த மீன் உற்பத்தி, 2023 - 24 ம் ஆண்டில் 8.84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தின் சார்பில், 'பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா' என்ற திட்டம் கடந்த ஐந்து ஆண்டு களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன் உற்பத்தி, மீன் வளத்தை பெருக்குதல், தரம், தொழில்நுட்பம், மீன்பிடிக்கு முந்தைய காலங்களுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், நவீன மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மீன் உற்பத்தியை அதிகரிப்பது, மீன்பிடி பரப்பளவு விரிவாக்கம், மீன்பிடி நடவடிக்கைகளை வகைப்படுத்துதல், தொழில்நுட்பங்களை பெருக்குதல், ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்திற்கு, 20,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடலோர மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மீன்பிடி மற்றும் மீன் உற்பத்தி தொழில்களை மென்மேலும் மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் தமிழக அரசு சார்பில் அவ்வப்போது வைக்கப்பட்டு இருந்தன. அதன் ஒருகட்டமாக, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், 932.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசு கேட்டிருந்தது.
இதனையடுத்து, மத்திய அரசின் பங்களிப்பாக 375.44 கோடி ரூபாய் வரையில் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வந்துள்ளது. இதன் வாயிலாக, 1,75,119 பயனாளிகளின் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக, தமிழக அரசிடமிருந்து தகவல் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்கு 1,577.08 கோடி ரூபாய் மதிப்பிலான 66 திட்டங்களுக்கு ஆதரவு தரும்படியும் தமிழக அரசு கோரியுள்ளது. அது குறித்தும் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
![]() |
- நமது டில்லி நிருபர் -