இந்தியாவில் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய காய்கறி, பழங்கள் விகிதம் அதிகரிப்பு
இந்தியாவில் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய காய்கறி, பழங்கள் விகிதம் அதிகரிப்பு
ADDED : டிச 15, 2024 12:18 AM

புதுடில்லி: தனிநபர் ஆண்டு வருமானம் போல், கடந்த 10 ஆண்டுகளில் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய காய்கறி, பழங்களின் விகிதம் 7 மற்றும் 12 கிலோவாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, வேளாண் உற்பத்தி மற்றும் வினியோகத் தொடர் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை:
நம் நாட்டில் ஒரு நபருக்கு, ஓராண்டுக்கு 227 கிலோ காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இது, ஒரு நபர் ஆண்டுக்கு உண்ணக்கூடிய காய்கறி, பழங்களுக்கான பொதுவான பரிந்துரையான 146 கிலோவை விட அதிகம். எனினும், உற்பத்தியாகும் காய்கறி, பழங்களில் 30 -- 35 சதவீதம் வரை கெட்டுப்போதல், அழுகுதல், சேதமடைதல் ஆகிய காரணங்களால் வீணாகின்றன.
விரைவாக கெட்டுப் போகக்கூடிய தன்மை காரணமாக காய்கறி, பழங்கள் வீணாவது ஒருபுறமிருக்க, அறுவடை, சேமிப்பு, போக்குவரத்து, பேக்கேஜிங் உள்ளிட்ட படிநிலைகளில் காணும் திறமையின்மையாலும், கணிசமான அளவு காய்கறி, பழங்கள் வீணாகின்றன.
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் காய்கறி, பழங்கள் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.