புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்
புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்
ADDED : அக் 13, 2024 11:37 PM

'கடந்த, 2012ல் திருப்பூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,443 பேர் (ஆண்கள், 700 பேர்; பெண்கள், 743 பேர்).
கடந்தாண்டு, 2023ல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை, 3,071 (ஆண்கள், 1,514 பேர்; பெண்கள், 1,557 பேர்).
ஆண்களை பொறுத்த வரை நுரையீரல் புற்றுநோய், பெண்கள், மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்கிறது அரசின் புள்ளிவிபரம்.
புற்றுநோய் வாய்ப்பு யாருக்கு அதிகம்?
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார் கூறியதாவது:
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்திவிட முடியும்; இந்த விழிப்புணர்வை பெண்கள் பெற வேண்டும். 40 வயது கடந்த பெண்கள், மாதம் ஒரு முறை தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்து, கட்டி போன்ற வேறு ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்; சந்தேகம் இருப்பின் தயங்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வயது அதிகமாக அதிகமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புஅதிகம்; குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால் குடும்ப உறுப்பினர்களில் பிறருக்கும் வரலாம்; உடற்பயிற்சியின்மை, உணவு பழக்கம், அதிக எடை, சுற்றுப்புற சுகாதாரம், ரசாயன நுகர்வு என புற்றுநோய் வர பல காரணங்கள் உண்டு.
குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள், 35 வயதில் இருந்தே ஆண்டுக்கொரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்ட் வாயிலாகவோ, அல்லது, இரு முறைகளிலும் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக நோய் தாக்கத்தை துல்லியமாக அறிந்து, துவக்கத்திலேயே சிகிச்சையை துவக்க முடியும். இதன் வாயிலாக பூரண குணம் பெறலாம்.
இவ்வாறு, சுரேஷ்குமார் கூறினார்.
இது, விழிப்புணர்வு மாதம்
தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் என்பதால் தான், அக்., மாதத்தை புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.'மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக் கூடாது' என்ற மையக் கருத்து இந்தாண்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 'புற்றுநோய் வருவதை தவிர்ப்பதற்கான பரிசோதனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்' என்பதே இதன் கருத்து.
ஆண்டு - ஆண் - பெண் - மொத்தம்
2012 - 700 - 743 - 1443
2013 - 837 - 976 - 1813
2014 - 914 - 1040 - 1954
2015 - 934 - 1003 - 1937
2016 - 839 - 950 - 1789
2017 - 994 - 1010 - 2004
2018 - 1304 - 1332 - 2634
2019 - 1221 - 1325 - 2546
2020 - 1295 - 1353 - 2648
2021 - 1368 - 1421 - 2789
2022 - 1441 - 1489 - 2930
2023 - 1514 - 1557 - 3071
- நமது நிருபர் -