'இந்தியா ஹிந்து நாடு; இதை ஏற்க அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை'
'இந்தியா ஹிந்து நாடு; இதை ஏற்க அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை'
ADDED : டிச 23, 2025 12:45 AM

புதுடில்லி: ''இந்தியா ஒரு ஹிந்து நாடு; இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள அரசியலமைப்பு ஒப்புதல் எதுவும் தேவையில்லை,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 100வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: சூரியன் கிழக்கில் உதிக்கிறது. எப்போது இருந்து இந்த செயல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது என்பதற்கு நம் அரசியலமைப்பின் ஒப்புதல் தேவையா? தேவையில்லை. இதுபோல், ஹிந்துஸ்தான் ஒரு ஹிந்து தேசம்.
இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதுவோர், நம் கலாசாரத்தை பாராட்டுகின்றனர். ஹிந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும், போற்றும் நபர் உயிருடன் இருக்கும் வரை இந்தியா ஒரு ஹிந்து தேசம். இது தான், ஆர்.எஸ்.எஸ்.,சின் சித்தாந்தம்.
பார்லிமென்ட் எப்போதாவது நம் அரசியலமைப்பை திருத்தி, 'இந்தியா ஒரு ஹிந்து தேசம்' என்ற வாக்கியத்தை சேர்க்க முடிவு செய்தால், அது அரசின் விருப்பம். அவ்வாறு செய்தாலும், செய்யாவிட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. அதுதான் உண்மை.
பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதி அமைப்பு ஹிந்துத்வாவின் முத்திரை அல்ல. பண்பாடு மற்றும் பெரும்பான்மையாக உள்ளோரின் ஹிந்து மத தொடர்புகளை கருத்தில் கொண்டு, இந்தியா ஒரு ஹிந்து தேசம் என ஆர்.எஸ்.எஸ்., வாதாடி வருகிறது. மதச்சார்பற்ற என்ற வார்த்தை அரசியலமைப்பின் முகவுரையில் முதலில் இடம்பெறவில்லை.
முன்னாள் பிரதமர் இந்திரா அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட போது, 1976ல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
தவறான பிரசாரம் காரணமாக, முஸ்லிம்களின் எதிரி ஆர்.எஸ்.எஸ்., என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது, தீவிரமான தேசியவாத அமைப்பு. ஒருபோதும், முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை கொண்டிருப்பதில்லை.
ஆர்.எஸ்.எஸ்., பணிகளை நேரில் பார்த்த சிலர், 'நீங்கள் தேசியவாதிகள்; ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக வாதிடுகிறீர்கள்; அவர்களை ஒருங்கிணைக்கிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல' என, குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறு சொல்பவர்கள் எல்லாம், ஆர்.எஸ்.எஸ்.,சின் செயல்பாடுகளை நேரில் கண்டவர்கள். எனவே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பற்றி பேசுபவர்கள், எங்கள் செயல்பாடுகளை நேரில் வந்து பார்க்க வேண்டும்.
அப்படி ஏதாவது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு இருப்பது தெரிந்தால், உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவ்வாறு இல்லையென்றால், ஆர்.எஸ்.எஸ்., தொடர்பான உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கருத்துகளை புரிந்துகொள்ள முடியாதவர்களின் மனதை யாராலும் மாற்ற முடியாது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் பயங்கரமாக தாக்கப்படுகின்றனர். இங்குள்ள ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதை கண்டிக்க வேண்டும்; தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

