ADDED : டிச 02, 2024 02:01 AM

புதுடில்லி: முடி உதிர்தல் பிரச்னை வேண்டுமானால், தனிநபர்களின் வளரும் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், உலக வர்த்தக தளத்தில், இந்தியாவுக்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாக, அதாவது, கருப்பு தங்கமாகி வருகிறது.
சர்வதேச அளவில் 'விக்' ஏற்றுமதிக்கான மொத்த மதிப்பு 1,325 கோடி ரூபாய். இதில், இந்திய விக் ஏற்றுமதி 1,160 கோடி ரூபாயாக உள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், 'இமராக் குரூப்' மற்றும் 'ஸ்ட்டேடிஸ்டா அண்டு ஸ்டார்ட்அப் டால்கி' ஆகியவற்றின் புள்ளிவிபரம் இதைத் தெரிவிக்கிறது.
இந்திய தலைமுடி சந்தை குறித்த தகவல்களை 'ஜரோதா' நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக மக்களின் தலையைக் காக்கும் இந்திய விக் சந்தை என்று, இந்த துறையில் இந்தியாவின் ஆதிக்கத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில், விக் மற்றும் தொடர்புடைய பொருட்கள் தயாரிப்பு, ஆண்டுக்கு 4,650 கோடி ரூபாய்க்கு நடைபெறுகிறது. இந்த துறை, நம்நாட்டில் ஆண்டுக்கு கூட்டு வளர்ச்சி விகிதமாக 15 சதவீதம் வளர்ந்து வருகிறது. இது சர்வதேச சராசரி வளர்ச்சியைவிட இருமடங்காகும்.
இந்தியாவில் இருந்து விக் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை, கிட்டத்தட்ட 120 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதில், ஆன்லைன் வணிக கொள்முதல் ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இத்துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
'தலை'யாய பிரச்னை
உலகம் முழுதும் சுமார் 200 கோடி பேர், முடி உதிர்தல் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். உலகின் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் தொகையில் இது 25 சதவீதம். அதாவது, உலகின் நான்கில் ஒருவரின் கவலையாக முடி உதிர்தல் மற்றும் வழுக்கை பிரச்னை உள்ளது.
இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற புள்ளிவிபரம் ஆச்சரியமானது. ஒழுங்கற்ற துாக்கம், குறைவான நேரம் துாங்குதல் ஆகியவை முடி உதிர்தலில் 30 சதவீத பங்கும்; குடல் மற்றும் ஜீரணக் கோளாறு 30 சதவீதமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சீரற்ற உடல் எடை உள்ளிட்ட வாழ்க்கை முறை பிரச்னைகள், முடி உதிர்தலில் 13 சதவீத இடம் வகிக்கின்றன. முடி உதிர்தல் பிரச்னையை சந்திக்கும் 60 சதவீத இளைய தலைமுறையினருக்கு மரபணு வழி காரணமாகிறது.
ஏன் வளர்கிறது 'விக்' சந்தை?
முடி உதிர்தல் பிரச்னையை சந்திப்பவர்களில் 40 சதவீதம் பேர் விக் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். தலைமுடி உதிரும் பிரச்னைக்காக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களில் 53 சதவீதம் பேர், தங்களிடம் வருபவர்களை விக் வைத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
தலைமுடி விதைத்தல் மற்றும் மருந்து சிகிச்சைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், விக் வைத்துக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்திய 'விக்'குக்கு வரவேற்பு ஏன்?
தடிமன், கருமை நிறம், அலை அலையான வடிவம், மிருதுவான தன்மை ஆகியவை, உலக நாடுகளில் இந்திய விக் மற்றும் தொடர்புடைய பொருட்கள் வரவேற்பு பெறக் காரணமாக உள்ளன.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் தலைமுடியை விட, இந்தியர்களின் தலைமுடியில் தயாரான பொருட்களையே அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர்.
எளிதாக, தேவைப்படும் நேரத்தில் கிடைப்பது, மற்ற நாட்டினரின் விக் விலையை விட குறைவாக இருப்பது ஆகியவையும் இந்திய விக் பெற்றுள்ள அதிக வரவேற்புக்கு காரணமாக இருக்கிறது. ஒரு கிலோ முடிக்கு 33,000 ரூபாய் வரை கிடைக்கும் நிலையில், ஒரு விக் 85,000 முதல் 2.50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உலக அளவில் 'விக்' சந்தை மதிப்பு ரூ.33,600 கோடி
ஆண்டுக்கு விக் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 7.90%
உலக விக் சந்தையில் இந்தியாவின் பங்கு 88%