இப்படியும் இருந்தது இந்தியா! வருமான வரி பிடித்தம் 97.50%
இப்படியும் இருந்தது இந்தியா! வருமான வரி பிடித்தம் 97.50%
ADDED : ஏப் 27, 2024 03:58 AM

வெளிநாடுகளில் செல்வந்தர்களுக்கு மிக அதிகமாக வரி விதிப்பதாகவும், இந்தியாவில் அப்படி இல்லை என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இந்தியாவில் வருமான வரியாக 97.50 சதவீதம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது என்பது தெரியுமா?
செல்வத்தை பகிர்ந்தளிப்பது, வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்துவது போன்ற விவாதங்கள் எழுந்து, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னரே, அதிகபட்சமாக 97.50 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு காலகட்டமும் இந்தியாவில் இருந்தது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் வருமான வரி 97.50 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டது. ஆனாலும், சிறிது காலத்திலேயே இந்த வசூல் முடிவுக்கு வந்துவிட்டது.
வருமானம் மற்றும் செல்வத்தில் சமநிலையை ஏற்படுத்த, வரி விதிப்பை ஒரு முக்கிய இயந்திரமாக கருதினார், இந்திரா காந்தி. இதன் அடிப்படையில், கடந்த 1970ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்து அவர் உரையாற்றினார்.
சமூக நலன் என்பதே அந்த பட்ஜெட்டின் கருப்பொருளாக இருந்தது. பசுமைப் புரட்சி நடைபெற்று வந்த காலகட்டம் என்பதால், விவசாயத் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. இதற்கு நிதியளிக்க மிகப்பெரிய தொகை தேவைப்பட்டது.
இந்திரா காந்தி அன்னிய முதலீடுகளை ஆதரிக்கிறவராக இல்லாத காரணத்தால், வரி செலுத்தும் மக்கள் இந்த சுமையை சுமக்க வேண்டியிருந்தது. இதையடுத்து, அதிக செல்வம் மற்றும் பரிசாக பெற்ற பொருட்களுக்கான வரியை உயர்த்துவதாக அவர் அறிவித்தார். குறைந்தபட்சமாக 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 10 சதவீதமும்; அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக வருமானம் பெறுவோருக்கு 85 சதவீதமும் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
இதுபோக, இப்பிரிவினருக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் நபர்களுக்கான வரி விகிதம், 93.50 சதவீதத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, கடந்த 1973-74 பட்ஜெட்டின் போது, அப்போதைய நிதியமைச்சர் ஒய்.பி. சவான், இப்பிரிவினருக்கான கூடுதல் வரியை, 15 சதவீதமாக உயர்த்தினார். இது வருமான வரியை 97.50 சதவீதமாக உச்சத்துக்கு கொண்டு சென்றது.
இந்த அதிகமான வரிவிதிப்பு, கடைசியில் வரி ஏய்ப்புக்கு வழிவகுத்துக் கொடுத்தது. இதனால் வரி வருவாய் குறைந்தது. இதுபற்றி ஆராய விசாரணை குழு அமைக்கப்பட்டது. வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதே வரி ஏய்ப்புக்கு முக்கிய காரணம் என விசாரணை குழு அதன் அறிக்கையில் தெரிவித்தது.
இதையடுத்து, அடுத்த நிதியாண்டு முதல் வரி விகிதங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. கடந்த 1985 - 86ம் நிதியாண்டில், அதிகபட்ச வரி விகிதம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள அதிகபட்ச வரி விகிதமான 30 சதவீதம், கடந்த 1997 - 98ம் நிதியாண்டு முதல் அமலில் இருந்து வருகிறது.
--நமது நிருபர்-