அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற 708 ஊராட்சிகளில் போதிய நிதி இல்லை ஆய்வில் தகவல்
அத்தியாவசிய பணிகளை நிறைவேற்ற 708 ஊராட்சிகளில் போதிய நிதி இல்லை ஆய்வில் தகவல்
ADDED : நவ 04, 2024 03:08 AM

சென்னை: தமிழகத்தில், 708 ஊராட்சிகளில், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வும், போதிய நிதி இல்லாதது கண்டறியப்பட்டு உள்ளது.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான மாதாந்திர ஊதியம், மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கப்படுகிறது. ஊராட்சிகளில் கணக்கு எண் ஒன்றில், ஊராட்சியின் சொந்த வருவாயில் கிடைக்கும் பணம் சேமிக்கப்படுகிறது.
கணக்கு எண் இரண்டில், மின்வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்க, அரசு சார்பில் வழங்கப்படும் நிதி சேமிக்கப்படும்.
கணக்கு எண் ஒன்றில் உள்ள தொகையை, ஊராட்சி தலைவர் ஊராட்சியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற செலவிடலாம்.
கணக்கு எண் இரண்டில் உள்ள தொகையை, மின்சாரம் தொடர்பான செலவுகளுக்கு மட்டுமே செலவிட முடியும்.
இந்நிலையில், கிராம ஊராட்சி பொது நிதி இருப்பு ஆய்வு செய்யப்பட்டதில், 708 ஊராட்சிகளில், தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளவும், போதிய நிதி இல்லாதது கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அரசு வழங்கிய மானிய நிதியில், மூன்று மாதங்களுக்கு மின்வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றுக்கு செலுத்த வேண்டிய தொகை போக மீதமுள்ள தொகையில், ஒரு லட்சம் ரூபாயை, கணக்கு எண் ஒன்றுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இத்தொகையில், அத்தியாவசிய பணிகளைச் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.