ஈரோடு விஜய் கூட்டத்தில் பிற கட்சியினர் :மேலிடத்துக்கு சென்ற உளவுத்துறை அறிக்கை
ஈரோடு விஜய் கூட்டத்தில் பிற கட்சியினர் :மேலிடத்துக்கு சென்ற உளவுத்துறை அறிக்கை
UPDATED : டிச 21, 2025 07:01 AM
ADDED : டிச 21, 2025 05:04 AM

ஈரோடு: ஈரோடில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் குறித்து, மத்திய உளவுத்துறையின் தமிழக பிரிவு மற்றும் கேரளாவில் இருந்தும் சில அதிகாரிகள் தமிழகம் வந்து, 28 கேள்விகளை மக்களிடம் கேட்டு கருத்தறிந்துள்ளனர்.
அந்த கருத்துகளை அறிக்கையாக, மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். மத்திய உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கரூர் சம்பவத்துக்கு பின், ஈரோடில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தை கூர்ந்து கவனித்தோம்.
விஜய் பிரசார கூட்டத்துக்கு திரண்டோர் யார்; கரூர் சம்பவத்துக்கு பின் கூட்டத்தின் பாதுகாப்பு எப்படி? மூன்று மாதமாக விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்ததால், த.வெ.க., வினர் என்ன நினைக்கின்றனர் என்பது உள்ளிட்ட 28 கேள்விகள், கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டன.
பல்வேறு கெடுபிடிகளையும் கடந்து, விஜய் பிரசார கூட்டத்துக்கு 17,000த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
கூட்டத்தில் பங்கேற்றோரில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். கூட்டத்துக்கு வந்தவர்களின் கார், பைக்குகள் பலவற்றில், பிற கட்சிகளின் சின்னம், கட்சிக் கொடி, தலைவர் படங்கள் இருந்தபோதிலும், அவர்கள் விஜய்க்காக வந்ததாக குறிப்பிட்டனர்.
விஜய் கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 60 சதவீதம் பேரும், பிற மாவட்டங்கள், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேரும் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்றோர் கூறிய கருத்துகளை அறிக்கையாக தயாரித்து, மேலிடத்துக்கு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

