ஊசியில்லாத 'சிரிஞ்ச்' வாயிலாக மருந்து செலுத்தும் முறை அறிமுகம்: ஐ.ஐ.டி., மும்பை பேராசிரியர் குழு வடிவமைப்பு
ஊசியில்லாத 'சிரிஞ்ச்' வாயிலாக மருந்து செலுத்தும் முறை அறிமுகம்: ஐ.ஐ.டி., மும்பை பேராசிரியர் குழு வடிவமைப்பு
ADDED : டிச 27, 2024 11:43 PM

மும்பை: உடலில், ஊசியின்றி 'சிரிஞ்ச்' வாயிலாக அதிர்வலைகளை பயன்படுத்தி, மருந்து செலுத்தும் முறையை ஐ.ஐ.டி., மும்பையில் பணியாற்றும் பேராசிரியர் விரென் மெனசஸ் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.
குழந்தைகள் ஊசிக்கு பயப்படுவது பொதுவானது என்றாலும், அந்த பெயரை கேட்டாலே அலறி ஓடும் பெரியவர்களும் உள்ளனர்.
அதிர்வலை
அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஊசி இல்லாமல் சிரிஞ்ச் வாயிலாக அதிர்வலைகளை பயன்படுத்தி, மருந்து செலுத்தும் முறையை ஐ.ஐ.டி., மும்பை குழு உருவாக்கிஉள்ளது.
அங்குள்ள, 'ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' பிரிவு பேராசிரியர் விரென் மெனசஸ் தலைமையிலான மாணவர் குழு, உடலில் வலியை ஏற்படுத்தாமல் ஊசி செலுத்தும் முறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டது.
இதன் விளைவாக 'பால்பாயின்ட் பேனா' வடிவிலான சிரிஞ்ச் ஒன்றை அக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
மிகவும் மெல்லிய முனையை உடைய அந்த சிரிஞ்ச்சில் வைக்கப்படும் மருந்து, அழுத்தம் காரணமாக உயர் ஆற்றல் அதிர்வலைகளை உருவாக்குகிறது.
இதனால், ஒரு ஜெட் விமானத்தின் வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகமாக பயணிக்கும் மருந்து, 'மைக்ரோஜெட்' வேகத்தில் விரைவாக உடலில் செலுத்தப்படுகிறது.
ஊசியின்றி, வலி எதுவும் தெரியாமலேயே உடலில் மருந்து செலுத்தப்படுகிறது.
ஊசி போடுவதால் தழும்புகள் ஏற்படுவதும், காயங்கள் ஏற்படுவதும் இந்த முறையில் சாத்தியமில்லை என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
விரைவில் விற்பனை
பல மாதங்களாக, எலிகளுக்கு சோதனை முறையில் இந்த ஊசி போடப்பட்டதில், அவை வலி எதையும் உணரவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த சிரிஞ்ச் வாயிலாக மயக்க மருந்து செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதையும் ஐ.ஐ.டி., மும்பை குழு உறுதி செய்துஉள்ளது.
மேலும் பல ஆராய்ச்சிகள் மற்றும் ஒப்புதலைத் தொடர்ந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த சிரிஞ்ச் பரவலாக கடைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த சிரிஞ்ச், ஊசிக்கு பயப்படும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, நாள்தோறும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கும் வரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

