சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை: உயர் நீதிமன்றம்
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை: உயர் நீதிமன்றம்
ADDED : டிச 07, 2024 02:20 AM

சென்னை: கோவை மாவட்டம் ஆலந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில், சட்டவிரோதமாக குவாரிகள் செயல்பட்டு, செம்மண் எடுக்கப்படுகிறது என, எம்.சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கவரத்தி அடங்கிய, சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
நடவடிக்கை
இந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட பகுதி களை நேரில் ஆய்வு செய்து, கோவை மாவட்ட சட்ட பணிக்குழு தலைவர் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நேற்று சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
வனப்பகுதிக்கு அருகில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக, வனத்துறை கடிதம் எழுதியுள்ளது. மாவட்ட கலெக்டரும் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும், மணல் அள்ளுவதை தடுக்கவில்லை. டன் கணக்கில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கனிம வளத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதை பார்க்கும்போது, இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் என்றே, இந்த நீதிமன்றம் கருதுகிறது.
அழிந்துபோன அந்த மலைப்பகுதியை மீண்டும் கட்டமைக்க முடியுமா? புகார் வந்ததும் ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை இல்லையா? தொடர்ந்து மணல் அள்ளப்படுவது குறித்து தகவல் அளித்தும், கனிம வளத்துறை, காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. செங்கல் சூளைகளை மூட உத்தரவிட்ட பின்கூட, முறையாக, 'சீல்' வைக்கப்படவில்லை.
நீதிமன்றம் தலையிட்ட பின்னும் கூட, இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
இது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. மூன்று பைகளில் செம்மண் எடுத்துச் சென்றவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, மணல் அள்ளிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வீடியோ
இவ்வளவு மணல் அள்ளப்பட்டு எங்கு சென்றுள்ளது; யார் இதை செய்தது என, அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்? சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''யாரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. அரசு தன் பொறுப்பையும் தட்டிக் கழிக்கவில்லை.
''மாவட்ட நீதிபதியின் அறிக்கைக்கு விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். பின், இந்த நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்,'' என்றார்.
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகியிருந்த கோவை போலீஸ் கமிஷனரிடம், 'விசாரணையை நேர்மையாக, நியாயமாக, சுதந்திரமாக, முழுமையாக நடத்த வேண்டும்.
'யாரையாவது திருப்திப்படுத்த விரும்பினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அந்த பகுதியில், ட்ரோன் வாயிலாக ஆய்வு செய்து, வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 11க்கு தள்ளிவைத்தனர்.
மேலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதித்தும், அடுத்த விசாரணையின்போது, அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டனர்.