மதுரையில் முருக பக்தர் மாநாடு உ.பி., முதல்வருக்கு அழைப்பிதழ்
மதுரையில் முருக பக்தர் மாநாடு உ.பி., முதல்வருக்கு அழைப்பிதழ்
UPDATED : ஜூன் 02, 2025 01:49 PM
ADDED : ஜூன் 02, 2025 05:46 AM

திருப்பூர்: மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
ஹிந்து முன்னணி சார்பில், 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில் வரும் 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக, தமிழகம் முழுவதும் வீடு தோறும் மக்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்குமாறு, நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். மடாதிபதிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சில நாட்கள் முன், சென்னை வந்த பவன் கல்யாணை நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.
நேற்று முன்தினம் லக்னோவில் உ.பி., முதல்வரை சந்தித்து, ஹிந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக உ.பி., முதல்வர் உறுதியளித்துள்ளார்.
மாநாடு அழைப்பிதழ் தொடர்பான புகைப்படத்தை உ.பி., முதல்வர், தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு செய்துள்ளார்.