ஐ.பி.எல்., சூதாட்டம்; கோடிகளில் புரளும் பணம்! 'முக்கிய புள்ளி'களை பிடிக்க போலீசார் தீவிரம்
ஐ.பி.எல்., சூதாட்டம்; கோடிகளில் புரளும் பணம்! 'முக்கிய புள்ளி'களை பிடிக்க போலீசார் தீவிரம்
UPDATED : ஏப் 24, 2025 06:08 AM
ADDED : ஏப் 23, 2025 11:16 PM

கோவை, ; கோவையில், ஐ.பி.எல்., சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சூதாட்டத்தை நடத்தும் நபர்களை பிடிக்க, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் துவங்கியதும், 'பெட்டிங்' வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஐ.பி.எல்., துவங்கிய காலத்தில் சில வீரர்கள் சூதாட்டத்தில் சிக்கினர். தற்போது, கிரிக்கெட் போட்டிகளை வைத்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்துவது அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இந்த சூதாட்டம் அரங்கேறி வருகிறது. சிலர் நேரடியாக ஸ்டேடியத்துக்கு சென்று, அங்கிருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'லோட்டஸ்247', 'ஜே.டி.,' 'டென்10', 'மேங்கோ777' உள்ளிட்ட சட்ட விரோத இணையதளங்களை பயன்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபடுவது கோவையில் அதிகரித்துள்ளது. கோவையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தடுக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போலீசார், கடந்த 11ம் தேதி ராம் நகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நந்தகுமார், 32, ராஜேஸ், 35, விபின், 44, ஜிதேந்திர சிங், 41, சவுந்தர், 29, விபுல், 36, அருண், 37 ஆகிய ஏழு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, ரூ.1.09 கோடியை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையில், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவோரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
செல்வபுரம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர், 39 மற்றும் பாலகிருஷ்ணன், 39 ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பாலகிருஷ்ணன் என்பவர் முக்கிய ஏஜன்டாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விபின் மற்றும் சவுந்தர் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் இருவரும், ஏற்கனவே சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள். ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக கோவையில், கடந்த, 10 நாட்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சூதாட்ட கும்பலை இயக்கும் முக்கிய புள்ளியை கைது செய்ய, கோவை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நாடு முழுவதும் ஐ.பி.எல்., சூதாட்டம் நடக்கிறது. 'டிஜிட்டல்' முறையில் நடைபெறுவதால், இவர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. எனினும், தனிப்படை போலீசார் சிறப்பாக செயல்பட்டு, சூதாட்டத்தை நடத்தும் ஏஜன்டுகளை கைது செய்கின்றனர். பல கோடி ரூபாய் புரளும் இந்த சூதாட்டத்தை நடத்தும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.