மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆதிதிராவிடர் நல நிதியா? அரசுக்கு எதிராக சிவகாமி கொந்தளிப்பு
மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆதிதிராவிடர் நல நிதியா? அரசுக்கு எதிராக சிவகாமி கொந்தளிப்பு
ADDED : பிப் 24, 2026 05:17 AM

அஞ்செட்டி: “தமிழக முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு 5,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கு, பட்டியலின மக்களுக்காக செலவிட வேண்டிய நிதியை பயன்படுத்தி உள்ளார்,” என, சமூக சமத்துவப்படை நிறுவன தலைவர் சிவகாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா அலுவலகம் முன், சமூக சமத்துவப்படை சார்பில், 'பஞ்சமி நில மீட்பு பயணம்' என்ற பெயரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சிவகாமி அளித்த பேட்டி: இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் எனக்கூறும் தமிழக அரசு, வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு, உரிய இழப்பீடு வழங்குவதில்லை. பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, அவர்களுக்கான அடிப்படை வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தமிழக அரசு கொடுக்க வேண்டும்; ஆனால், அதை செய்யவில்லை.
மகளிர் உரிமைத்தொகையாக, தமிழக அரசால் சமீபத்தில் 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி, ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி. அந்நிதியை எடுத்தது தவறு; குற்றம்.
அஞ்செட்டி தாலுகாவில், மயானத்தை கூட ஆதிக்க ஜாதியினர் விட்டு வைக்கவில்லை. ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி போட்டுள்ளனர். இதை சரிசெய்யாத மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராடுவோம். அந்த கிராமத்தில் யாராவது உயிரிழந்தால், தாலுகா அல்லது கலெக்டர் அலுவலகம் முன், புதைப்போம்.
த.வெ.க., தலைவர் விஜய், தன் கட்சி தேர்தல் அறிக்கையில், 'பஞ்சமி நிலங்களை மீட்போம்; பட்டியலின மக்களுக்கான நிதி, ஆதிதிராவிட மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் செலவழிக்கப்படும்' என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

