தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் துரைமுருகன்?
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் துரைமுருகன்?
ADDED : ஜன 20, 2026 04:23 AM

வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக, தேர்தல் அரசியலில் இருந்து அமைச்சர் துரைமுருகன், 87, ஓய்வு பெறுகிறார்.
மூத்த அமைச்சரும், தி.மு.க., பொதுச்செயலருமான துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, துரைமுருகனின் உடல் நலத்தை விசாரித்தார்.
அப்போது, 'துரைமுருகனுக்கு காது கேட்கும் திறன் குறைந்துள்ளதாகவும், அவரது உடல் பலவீனமாக இருப்பதாகவும், அவர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்' என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல், ஒதுங்கிக் கொள்ள துரைமுருகன் முடிவு செய்துள்ளார்.
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், அவருக்கு பதிலாக, அவரது மகன் கதிர் ஆனந்த், அந்த தொகுதியில் போட்டியிடுவார் எனவும், அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது, வேலுார் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக கதிர் ஆனந்த் இருப்பதால், காட்பாடி சட்டசபை தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால், வேலுார் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலை தவிர்ப்பதற்காக, கதிர் ஆனந்த் மனைவிக்கு, சட்டசபை தேர்தலில் காட்பாடியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என, துரைமுருகன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, தி.மு.க.,வில் வேலுார் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து, வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தன் பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் ஸ்டாலினை, சென்னையில் அவரது வீட்டில் நேற்று சந்தித்து, கதிர் ஆனந்த் வாழ்த்து பெற்றார்.
- நமது நிருபர் -

