மாஜிக்கள் மீது வழக்கு தொடர அனுமதியா? முதல்வர் வலியுறுத்தலால் அ.தி.மு.க.,வில் கலக்கம்!
மாஜிக்கள் மீது வழக்கு தொடர அனுமதியா? முதல்வர் வலியுறுத்தலால் அ.தி.மு.க.,வில் கலக்கம்!
ADDED : ஜன 01, 2024 01:31 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர, விரைவாக அனுமதி வழங்கும்படி, கவர்னர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர அனுமதி கோரி, கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்பு, 15 மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதேபோல, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் வழக்கு தொடர அனுமதி கோரிய கோப்பு, ஏழு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.
கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தெம்பாக இருந்தனர். தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலும், அவர்களுக்கு சாதகமாக இருந்தது.
சந்திக்க நேரிடும்இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் மாளிகை சென்று, கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். அவருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அலுவலர்கள் சென்றனர்.
அரை மணி நேர சந்திப்பின் போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர அனுமதி கோரிய கோப்பின் மீது, உடனடியாக அனுமதி வழங்கும்படி, கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தி உள்ளார். அப்போது, கவர்னர் கேட்ட சந்தேகங்களுக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
எனவே, விரைவில் அந்த கோப்புகள் மீது, கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, அ.தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் ஒப்புதல் அளித்தால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், ஊழல் வழக்கை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி உட்பட பலர் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.
கட்சிக்கு நெருக்கடி
ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகி விட்ட சூழலில், கவர்னர் ரவியை பா.ஜ., தலைமை வாயிலாக தங்கள் மீதான நடவடிக்கையை தள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் முன்னாள் அமைச்சர்கள் இழந்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டால், அதனால் கட்சிக்கு நெருக்கடி உருவாகும் என்பதால், அதை சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தரப்பிலும், அ.தி.மு.க., கட்சி தரப்பிலும் ஆலோசனை நடந்து வருகிறது.
- நமது நிருபர் -