ADDED : செப் 30, 2025 04:54 AM

கரூர் சம்பவம் தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜயிடம், வெளிநாட்டில் இருக்கும் ராகுல், 15 நிமிடங்கள் மொபைல் போனில் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்தும் , அது எப்படி நடந்தது என்பது குறித்தும், விஜயிடம் ராகுல் கேட்டறிந்தார். நடந்த சம்பவங்கள் குறித்து விஜய், அவருக்கு விளக்கியுள்ளார்.
அப்போது, நடந்த சம்பவத்துக்காக தன்னுடைய மனம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து தான் மேற்கொள்ளவிருக்கும் பிரசார திட்டங்கள் குறித்தும் ராகுலிடம் கொஞ்சம் விளக்கமாகவே விஜய் பேசியுள்ளார்.
தமிழக அரசு தரப்பில், தன்னுடைய பிரசாரத்துக்கும், அரசியல் ரீதியிலான நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் இடைஞ்சல்கள் குறித்தும் விஜய், பட்டியல் போட்டு வரிசையாக பேசியுள்ளார்.
ஆனால், தமிழக அரசு குறித்த குறைகளை விஜய் பட்டியல் போட்ட போது, ராகுல் பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லை. தங்களோடு இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசு மீது விஜய், குற்றஞ்சாட்டி பேசியபோதும், ராகுல் அதை பொறுமையாக கேட்டுக் கொண்டது, இருவருக்கும் இடையிலான நட்பாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக காங்., கமிட்டி முக்கிய தலைவர்கள் பலரும் விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பேசி, அதை தலைமைக்கு வலியுறுத்தி வருவது அனைத்தும் ராகுலுக்குத் தெரியும்.
அடுத்தடுத்த கட்டங்களில், கூட்டணியை நோக்கி நகர்வதற்கு இந்த பேச்சு ஒரு அச்சாரமாக
இருக்கட்டும் என்று நினைத்துக் கூட, ராகுல், விஜயிடம் பேசியிருக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னணி தலைவருமான ராகுல் வெளிநாட்டில் இருப்பதால், அவரது துாதராக, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், இன்று கரூர் வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
'கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாயை பிரித்து கொடுப்பதற்கான பட்டியலை, கரூர் எம்.பி., ஜோதிமணி தயாரித்துள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு காசோலைகளை, கே.சி.வேணுகோபால் இன்று வழங்க உள்ளார்.
இதற்கிடையில், நடிகர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசியிருப்பதாக கூறப்-படுகிறது.
நடிகர் விஜயிடம் பேசிய ராகுல், முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் பேசி, கரூர் சம்பவம் குறித்து கேட்டறிந்ததாக தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -