திமுக சீனியர் மா.செ.,க்களை மாற்றும் விவகாரம் கைவிடப்படுகிறதா?
திமுக சீனியர் மா.செ.,க்களை மாற்றும் விவகாரம் கைவிடப்படுகிறதா?
ADDED : நவ 25, 2026 05:35 AM

மதுரை: கட்சி மறுசீரமைப்பு என்ற பெயரில் தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேலான மா.செ.,க்களை மாற்றும் முடிவை தலைமை கைவிடுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. அமைப்பு ரீதியான 77 மாவட்டங்களில் இருந்து 110 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதில், 70 வயதை கடந்த 21 மா.செ.,க்களை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
பகுதி, ஒன்றியம், வட்ட செயலாளர் பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 110 மா.செ.,க்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டும், அதை தலைமை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இத்திட்டம் கைவிடப்படுகிறதா என நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு முன்பே மறுசீரமைப்பு பட்டியல் தயாராகிவிட்டது. ஆனால் மா.செ.,க்கள் மாற்றம் தேர்தலை பாதிக்கும் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டது. பகுதி, வட்டச் செயலாளர் பதவிகளுக்கு வயது நிபந்தனை தளர்த்தப்பட்டது.
புதிய மா.செ.,க்கள் பட்டியல் நவ.,15, நவ., 18ல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 'இனி நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கு பின் ஆலோசிக்கலாம்' என சீனியர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். சிலர் மா.செ., பதவி போய்விட்டால் த.வெ.க.,வில் தஞ்சமடையும் முடிவிலும் உள்ளனர். இதையறிந்து மா.செ.,க்கள் மாற்றும் முடிவை தலைமை கைவிடவுள்ளது என்றனர்.
