sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சிறுதொழில் துவங்க முட்டுக்கட்டை போடுகிறதா அரசு?: ஊராட்சி அனுமதி கட்டாயமாக்கப்படுவதால் சிக்கல்

/

சிறுதொழில் துவங்க முட்டுக்கட்டை போடுகிறதா அரசு?: ஊராட்சி அனுமதி கட்டாயமாக்கப்படுவதால் சிக்கல்

சிறுதொழில் துவங்க முட்டுக்கட்டை போடுகிறதா அரசு?: ஊராட்சி அனுமதி கட்டாயமாக்கப்படுவதால் சிக்கல்

சிறுதொழில் துவங்க முட்டுக்கட்டை போடுகிறதா அரசு?: ஊராட்சி அனுமதி கட்டாயமாக்கப்படுவதால் சிக்கல்


ADDED : நவ 02, 2024 12:20 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் புதிதாக குறுந்தொழில் துவங்க, ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, அரசு உத்தரவாக மாறினால், அனுமதி தர வேண்டுமென்றே தாமதம் செய்யும்பட்சத்தில், குறுந்தொழில் துவக்க முடியாத நிலை ஏற்படும்.

கட்டாயம்


தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய கடன் உள்ளிட்ட உதவிகளை செய்கின்றன.

தொழில் துவங்க விரும்புவோர், அரசு சலுகைகளை பெற, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மாவட்ட தொழில் மையம், மின்வாரியம் என, சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற வேண்டும். பலர், வீடுகளிலேயே, 'வெல்டிங், பேக்கிங்' உள்ளிட்ட குறுதொழில்களை துவக்கி வருகின்றனர்.

ஏற்கனவே, பல அரசு துறைகளின் அனுமதி பெற்று, தொழில் துவங்கும் நிலையில், இனி, குறுந்தொழில் துவங்குவோர், ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒரு தொழில் துவங்க, பல அரசு துறைகளிடம் அனுமதி பெறப்படுகிறது. குறுந்தொழில்கள் மிகக் குறைந்த முதலீட்டில் துவக்கப்படுகின்றன. இதற்கும், அரசு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

இந்த சூழலில், புதிதாக துவங்கப்படும் குறுந்தொழில்களில், என்னென்ன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை, ஊராட்சியில் தெரிவித்து, அனுமதி பெறும் வகையில், புதிய உத்தரவு பிறப்பிக்கும் பணி நடக்கிறது. இதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு, நான்கு துறைகள் வாயிலாக, முதல்வர் அலுவலகத்திலும் அனுமதி பெறப்பட உள்ளது.

தாமதமாகும்


ஒரு கிராமத்தில், குறைந்த சதுர அடியில் வீடு கட்டினாலே பணத்தை எதிர்பார்த்து, ஊராட்சி தலைவர்களாக உள்ள அரசியல் கட்சியினர், அனுமதி தர தாமதம் செய்கின்றனர்.

இந்த சூழலில், தொழில் துவக்க அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்தால், அனுமதி அளிக்க பாரபட்சம் காட்டுவர்; பணம் எதிர்பார்ப்பர். மாற்றுக் கட்சியினரா, என்ன ஜாதி என்றெல்லாம் பார்ப்பர்.

இதனால், தொழில் துவங்கி முன்னேறிச் செல்ல விரும்பும் புதிய தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுவர். புதிதாக தொழில் துவங்க யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

எனவே, இந்த முடிவுக்கு, அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்துவதால் ஆண்டுக்கு, 28,000 கோடி ரூபாய்க்கு செலவு செய்கிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.

எனவே, ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், அதன் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஊராட்சிக்கு, வருவாய் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், குறுந்தொழில் துவங்குவோர் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, சில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அனுமதி பெறுவது கட்டாயம் என்பதற்கு பதில், தொழில் துவங்குவோரிடம் ஒருமுறை செலுத்தக்கூடிய கட்டணத்தை, குறைந்தளவில் வசூலிக்கலாம். இதையும், மாவட்ட தொழில் மையம் வசூலித்து, ஊராட்சியிடம் வழங்கும் வகையில், இணையதளத்தில் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இதனால், ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கும்; தொழில் துவங்குவதிலும் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தொழில்கள் வராது!

தமிழகத்தில், 62 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் மத்திய அரசின், 'உத்யம்' தளத்தில், 25.07 லட்சம் நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்துள்ளன. அதில், 24.52 லட்சம் குறுந்தொழில்கள்; 51,022 சிறு தொழில்கள்; 4,388 நடுத்தர தொழில் நிறுவனங்கள். குறுந்தொழில்களில், இயந்திர தளவாடங்களின் முதலீடு, 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவும், ஆண்டு விற்றுமுதல், 5 கோடி ரூபாய்க்கு குறைவாகவும் இருக்க வேண்டும். இயந்திரங்களின் முதலீடு, 10 கோடி ரூபாய், ஆண்டு விற்றுமுதல், 50 கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தால் சிறு நிறுவனங்கள். தளவாடங்களின் முதலீடு, 50 கோடி ரூபாய்க்கு மிகாமலும், ஆண்டு விற்றுமுதல், 250 கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தால், நடுத்தர நிறுவனங்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில், 5,068 நிறுவனங்கள், 63,573 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தன. இதுவரை, 1,800 நிறுவனங்கள், 17,800 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை துவக்கியுள்ளன. மீதி நிறுவனங்கள் தொழில் துவங்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த சூழலில் ஊராட்சியிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்பது நடைமுறைக்கு வந்தால், புதிய தொழில் துவங்குவது முடங்கும் அபாயம் ஏற்படும்.








      Dinamalar
      Follow us