ம.தி.மு.க.,வும் இரண்டாக உடைகிறதா? சத்யா துரோகி என வைகோ ஆவேசம்
ம.தி.மு.க.,வும் இரண்டாக உடைகிறதா? சத்யா துரோகி என வைகோ ஆவேசம்
ADDED : ஜூலை 10, 2025 03:27 AM

''பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
அவர் அளித்துள்ள பேட்டி:
ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், முதன்மை செயலர் துரையும், துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி, சமரசமாகும் நிகழ்வு நடந்தது.
அப்போது சத்யா மட்டும் தான், முகம் வாட்டத்துடன், இறுக்கமாக, உட்கார முடியாமல் தவித்தபடி இருந்ததை அனைவரும் பார்த்தனர்.
கொஞ்ச நாட்களாக, எந்த நிகழ்ச்சிக்கு சத்யா வந்தாலும், ஒன்றும் பேசுவதில்லை. வெளிநாடுகளுக்கு வி.ஜி.பி., சந்தோஷம், அவரை அழைத்து செல்கிறார்.
எந்த ஊரிலாவது, நான் ம.தி.மு.க.,வை சேர்ந்தவன் என்றோ, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் என்றோ சொன்னதில்லை. மாமல்லபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் சத்யா என, சொல்லி தான் ஏழெட்டு முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.
பிரபாகரனுக்கு மாத்தையா தான் விசுவாசமாக இருந்தவர். விடுதலை புலிகள் வரலாற்றில், தமிழ் ஈழம் மலர்ந்தால், மாத்தையாவை தான் முதல்வராக்குவேன் என பிரபாகரன் என்னிடம் கூறினார்.
ஆனால், பிரபாகரனை கொலை செய்யும் சதி திட்டத்திற்கு, மாத்தையா உடன்பட்டார். அவரிடம், 'நீ எப்படி துரோகம் செய்தாய்' என, பிராபகரன் கேட்டார். என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஒரு காலத்தில் நன்றாக உழைத்து விட்டு, பல போராட்டங்களில் பங்கேற்று விட்டு, இறுதியில் துரோகம் செய்தவர்களின் வரலாறை படித்திருக்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.
இதற்கிடையில், சென்னை மண்டல ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், இன்று பூந்தமல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கான பேனர் மற்றும் போஸ்டர்களில், மல்லை சத்யா படத்தை போட வேண்டாம் என, கட்சி நிர்வாகிகளுக்கு ம.தி.மு.க., தலைமை அலுலவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியலை ஏற்காமல் வெளியேறிய, அதிருப்தி மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மல்லை சத்யா தலைமையில் செயல்படுவது தொடர்பாக, நேற்று ஆலோசித்துள்ளனர்.
இதனால், ம.தி.மு.க., வைகோ அணி, மல்லை சத்யா அணி என, இரு அணிகளாக பிளவுபடுமா என்ற கேள்வியும், கட்சி வட்டாரங்களில் எழுந்து உள்ளது.
- நமது நிருபர் -

