ADDED : ஆக 26, 2025 06:19 AM

சென்னை : ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத, மனிதநேய மக்கள் கட்சி உட்பட ஆறு பதிவு செய்த கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகளுக்கு, வருமான வரி விலக்கு, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு, பொது சின்னம் ஒதுக்கீடு ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 2019 முதல் எந்தவித தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்காத, மனிதநேய மக்கள் கட்சி உட்பட ஆறு கட்சிகளுக்கு, கட்சி பதிவு உரிமம் ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பி, விளக்கம் அளிக்கக் கோரி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பிஉள்ளார்.
அதன்படி, கோகுல மக்கள் கட்சி, இந்தியன் லவ்வர்ஸ் பார்ட்டி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய ஆறு கட்சிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கட்சிகள் இன்றைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இல்லாதபட்சத்தில், கட்சியின் பதிவு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கின்றனர்.