கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குற்றங்கள்; கடமையில் தவறுகிறதா தமிழக உளவுத்துறை?
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குற்றங்கள்; கடமையில் தவறுகிறதா தமிழக உளவுத்துறை?
UPDATED : டிச 29, 2024 04:14 AM
ADDED : டிச 28, 2024 11:16 PM

சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் அண்ணா பல்கலை வளாகத்துக்குள், அங்கே பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது, அரசுக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது.
டில்லியில், நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு இறந்து போனார். நாடு முழுதும், இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த சூழலில், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டு, சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் அமலில் உள்ளது.
இருந்தபோதிலும், இதுபோன்ற பிரச்னைகள் தமிழகத்தில் குறையவில்லை; பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. கூடவே, கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், மோசடி என குற்றங்கள் அதிகரித்து, தமிழக காவல் துறைக்கு சவால் விட துவங்கி உள்ளன.
கேள்வி எழுகிறது
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்தால், அரசு நிர்வாகத்திற்கு பக்கபலமாகவும், காவல் துறைக்கு பின்புலமாகவும் சிறப்பாக செயல்பட வேண்டிய உளவுத் துறை என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள், அந்த கேள்விக்கு வலுவூட்டுகின்றன.
l.ராமநாதபுரம் கீழசெல்வனுாரை சேர்ந்தவர் வினோத்பாபு. மாற்றுத்திறனாளியான இவர், லண்டனில் நடந்த, 'வீல் சேர்' கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றதாக, கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை கோட்டையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
போலி சான்றிதழையும், கோப்பையையும் காட்டி, அவர் முதல்வர் அலுவலகத்தையே ஏமாற்றிய செய்தி, பின்னர் வெளியானது. இந்த இடத்தில் உளவுத்துறை என்ன செய்தது என்ற கேள்வி எழுந்தது. முன்கூட்டியே உண்மையை கண்டறிந்து, அரசுக்கு சொல்ல வேண்டிய கடமையில் இருந்து தவறியதாக சொல்லப்பட்டது.
l.சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த -ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது
அவர் தமிழக ஆளுங்கட்சியின் அயலக அணி பொறுப்பில் இருந்ததும், முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரோடு தொடர்பில் இருந்ததும் பின்னர் தெரியவந்தது. இத்தனை பெரிய குற்றத்தை செய்த ஜாபர் சாதிக் குறித்து, உளவுத்துறை முன்கூட்டியே கண்டறிய தவறிவிட்டது
l.சென்னை அண்ணா பல்கலையில் ஒரு மாணவிக்கு நடந்துள்ள கொடூரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருப்பவர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகரன். தி.மு.க.,வில் பொறுப்பில் இருப்பவர் என்றும், துணை முதல்வர், அமைச்சர்கள், தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர் என்ற தகவல்கள் எல்லாம் வரிசைகட்டி வருகின்றன.
அதற்கான ஆதாரங்களும், கட்சி பிரமுகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், கட்சிக்காக அவர் வெளியிட்ட விளம்பரம், துண்டறிக்கைகளும் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
'சென்சிட்டிவ்' விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து, கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, வெளியே கசிந்த விவகாரத்தையும், அரசுக்கும், முதல்வருக்கும் உளவுத்துறை முன்கூட்டியே சொல்ல மறந்து விட்டதா அல்லது மறைத்து விட்டதா என்ற கேள்வி, காவல்துறைக்குள் வேகமாக ஒலிக்கிறது.
வரையறுக்கப்பட்ட சிறப்பான ஒரு அமைப்பாக தமிழக போலீசும், அதன் உளவுத்துறையும் இருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பது குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
காவல் துறையை மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டால், அதில் உளவுத்துறை என்பது இதயம் போன்றது. அப்படிப்பட்ட ஒரு அமைப்புக்கு பணியாட்களை நியமிக்கும் போது, நேர்மையான, தகுதி வாய்ந்த, திறமையானவர்களை நியமிப்பதை முன்பெல்லாம் வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆளுங்கட்சி சிபாரிசு
தற்போது, அந்த நிலைமை முற்றிலும் மாறி உள்ளது. ஆளுங்கட்சியினர் சிபாரிசு அடிப்படையில் உளவுத்துறையில் நியமிக்கப்படுகின்றனர். அந்த பிரமுகர்களின் விருப்பத்திற்கேற்ப, அரசுக்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
இதனால், கள யதார்த்தம் அரசுக்கு தெரிவதில்லை. இப்படி நியமிக்கப்படுவோரையும் இடம் மாறுதல் செய்வதில்லை. பல ஆண்டு காலம் உளவுத்துறையிலேயே பணியாற்றுவதால், எஜமானர்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப செயல்படுகின்றனர். இதனால், உண்மை முற்றிலும் மறைக்கப்படுகிறது.
உளவுத்துறையை பொறுத்தவரை, எல்லா தகவல்களும் குறுக்கு விசாரணை செய்யப்படும்; இப்போதெல்லாம் அது கிடையாது. உளவுத்துறையில் பணியாற்றும் கீழ் நிலை ஊழியர்கள் என்ன சொல்கின்றனரோ, அதுவே ஆட்சி மேலிடம் வரை தகவலாக செல்கிறது. இதனாலேயே, ஆட்சி நிர்வாகத்தில் பெரும் குழப்பங்களும், சிக்கல்களும் ஏற்படுகின்றன.
கடந்த சில காலமாக, உளவுத் துறையினர், எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை கவனிப்பதிலேயே நேரத்தைப் போக்குகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., ஆட்சியில் எப்போதும் உளவுத்துறை அறிக்கையை நம்புவதில்லை.
உளவுத்துறையினர் திரட்டிக் கொடுக்கும் தகவல்களை, தம் கட்சியினருடன் ஆலோசித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால், கட்சிக்காரர்கள் செய்யும் தவறுகளை, உளவுத்துறை அதிகாரிகள் தங்கள் அறிக்கைகளில் குறிப்பிடுவதில்லை. ஏதாவது ஒரு அறிக்கையில், உண்மை தகவலாக ஆளுங்கட்சியினர் பற்றிய தகவல் இருந்தால், அறிக்கை தயார் செய்த அதிகாரி பழிவாங்கப்படுகிறார்.
பொருட்படுத்துவதில்லை
இதனால், உளவுத்துறைக்கு கிடைக்கும் முக்கியமான தகவல் கூட மேலிடம் வரை செல்வதில்லை; மறைக்கப்படுகின்றன. பல நேரங்களில் உளவுத்துறை அறிக்கையை, மேலிடம் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்ய வேண்டாம் என, உளவுத்துறை அறிவுறுத்தியது. அதை ஏற்காமல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இறுதியில், உயர் நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி உளவுத்துறை மூக்கறுபட்ட நிகழ்வுகளும் உண்டு.
தமிழகம் முழுதும் இருந்து திரட்டப்படும் தகவல்கள், மாநில உளவுத்துறை அதிகாரிகளால், காலை, மதியம், இரவு என, மூன்று அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, முதல்வர், கவர்னர் ஆகியோருக்கு அனுப்பப்படும்.
அந்த அறிக்கையை பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்காக உத்தரவிட வேண்டியது முதல்வரின் அன்றாட கடமைகளுள் ஒன்று. சமீப காலமாக, அறிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

