என்.ஐ.ஏ., சோதனையில் ஐ.எஸ்., அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் சிக்கினார்
என்.ஐ.ஏ., சோதனையில் ஐ.எஸ்., அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் சிக்கினார்
ADDED : ஜன 29, 2025 05:28 AM

தமிழகத்தில், 20 இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போல, சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அல்பாசித் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த, 2022 அக்., 23ல், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகளை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர் விசாரணையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அரபி கல்லுாரிகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை, ஆயுத பயிற்சி களங்களாக பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார்படுத்தி வருவதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில், 15 பேரின் வீடுகளிலும், சென்னையில் புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள கஸ்துாரி ஆம்புலன்ஸ் சர்வீஸ் அலுவலகத்திலும், நேற்று அதிகாலை, 3:00 மணியில் இருந்து, ஆறு மணி நேரம் சோதனை நடத்தினர்.
அப்போது புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போல பதுங்கி இருந்த, மயிலாடுதுறை திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அல்பாசித், 42 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டம் நீடுரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா, 41; ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். 'இக்காமா' என்ற தற்காப்பு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். இதனால், 'இக்காமா' சாதிக் பாட்ஷா என்று, அழைக்கப்படுகிறார்.
அவர் சென்னையில் முகாமிட்டு, அண்ணா சாலையில் எல்.ஐ.சி., கட்டடம் அருகே, ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். அங்கு இக்காமா தற்காப்பு பயிற்சி என்ற பெயரில், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளித்து வந்தார். இங்கு, அல்பாசித்தும் பயிற்சி பெற்றுள்ளார். இருவரும், முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்து, எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து வந்தனர்.
சாதிக் பாட்ஷா, 'கிளாபா பார்ட்டி ஆப் இந்தியா, கிளாபா பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்புகளையும் துவங்கி நடத்தி வந்தார். அதில், அல்பாசித் முக்கிய நிர்வாகியாக இருந்தார். இருவரும், மக்கள் நீதி பாசறையிலும் நிர்வாகிகளாக இருந்தனர். இந்த அமைப்பு பின்னாளில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற பெயரில் உருவெடுத்தது.
இந்த அமைப்பின் சார்பில், கேரள மாநிலம் கண்ணுார் அருகே, யோகா பயிற்சி முகாம் என்ற பெயரில், சாதிக் பாட்ஷா மற்றும் அல்பாசித் தலைமையில், மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2022ல், மயிலாடுதுறையில் ரயிலை கவிழ்க்கும் சதி திட்டத்துடன் பதுங்கி இருந்த சாதிக் பாட்ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேர், உள்ளூர் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்க மறுத்த சாதிக் பாட்ஷா, போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்; ஐவரும் கைதாகினர்.
ஜாமினில் வெளிவந்த பின், சாதிக் பாட்ஷா, காரைக்காலை சேர்ந்த தொழில் அதிபரை மிரட்டி, 2 கோடி ரூபாய் பறிக்க முயன்ற வழக்கில், 2024ல் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனால் அல்பாசித், சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் போல தங்கி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வந்துள்ளார். அவரால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -