சிந்தனைக்களம்: 'சுபமுகூர்த்த நாள்!': யாருக்கு... எப்போது... எப்படி?
சிந்தனைக்களம்: 'சுபமுகூர்த்த நாள்!': யாருக்கு... எப்போது... எப்படி?
ADDED : ஜன 22, 2025 06:22 AM

'வருமானவரி சோதனை' குறித்து பொதுவெளியில் பல்வேறு கருத்து சொல்லப்பட்டாலும், பொதுவாக ஐ.டி., ரெய்டுகள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன, எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன, விருப்பு - வெறுப்பை பொறுத்து ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் மீது நினைத்த மாத்திரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு சென்று விட முடியுமா? என்பது போன்ற பல கேள்விகள் பலரது மண்டையையும் குடையத்தான் செய்கிறது.
பொதுவாக, ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள், வங்கி நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள், வருவாய்க்கு அதிகமாக சேர்க்கப்படும் சொத்து, திடீர் செல்வ வளம் பெருகுதல், மிகப்பெரிய விழாக்கள், பிரமாண்ட திருமணங்கள், போன்றவற்றுக்கு செலவழிக்கப்படும் தொகை பற்றி வருமான வரித்துறைக்கு வரும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் ரெய்டு திட்டமிடப்படுகிறது.
அதேபோல, ரெய்டுக்குப்போகும் இடத்தில், அங்கிருக்கும் பணம், பொருள், ஆவணங்கள் எல்லாவற்றையும் காரண, காரியமின்றி அதிகாரிகள் அள்ளிச்சென்றுவிடவும் முடியாது.
வருமான வரி வசூலிப்பது, சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் அந்தக் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1860ல் இந்தியாவில் வருமான வரி அறிமுகமானது. அதன் பிறகு பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு சுதந்திரத்துக்குப் பின்னர், 1961ல் வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அந்தச் சட்டத்தின்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துக்கள், வெளியிடாத வங்கி நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை நேரிலும் சென்று சோதனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
உளவுத்துறை அறிக்கை, ரகசிய தகவல்கள் மூலமாக கிடைக்கும் விவரங்கள், தேர்தல் நேரங்களில் பறிமுதல் செய்யப்படும் பணம், போன்றவற்றையும் வருமான வரித்துறை விசாரிக்கும். 'ஐ.டி., ரெய்டு' மூலம் 2023ம் நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 8 ஆயிரத்து 500 கோடியை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.
எவ்வாறு திட்டமிடப்படுகிறது?
ஐ.டி. ரெய்டுக்கு முன்பாக, வருமான வரித்துறை நன்கு திட்டமிடுகிறது. அதற்கு முன்பாக தீர விசாரிப்பது, தகவல் சேகரிப்பது, புலனாய்வு செய்வது, ரெய்டுக்கு தேவைப்படும் அதிகாரிகளை திரட்டுவது, ரெய்டுக்கு போகும் இடங்களை கண்டறிவது, குறிப்பிட்ட நாளில், நேரத்தில் ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களுக்கு சென்றைடைவது என்று பல கட்டங்களாக அதிகாரிகள் திட்டமிட்டு ரெய்டுக்கு நாள் குறிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு 'சுபமுகூர்த்தத்திற்கு' நாள் குறிப்பதுபோலத்தான் ஐ.டி., ரெய்டுக்கும் வருமான வரித்துறை திட்டமிடுகிறது. குறிப்பிட்ட நபர் / நிறுவனங்களில் ரெய்டுக்கான நாள், இடம், நேரம், திசை, ஆட்கள், ஆவணங்கள், சந்தேக தகவல்கள் என எல்லாவற்றையும் திரட்டிக்கொள்கிறார்கள்.
திட்டமிடும் அதிகாரி மூத்த அதிகாரிகளிடம் மூன்று கட்ட அளவில் முன் அனுமதி பெற்ற பின் தான் ரெய்டு தொடங்குகிறார்கள். சில ரெய்டுகள் ஆண்டுக் கணக்கில் திட்டமிடப்படுகிறது. எனவே, ஒரு வருமானவரித்துறை ரெய்டு என்பது 'திடுதிப்பென' நடப்பதில்லை. பல கட்டங்களில் அதிகாரிகள் / உயர் அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவலை புலனாய்வு செய்தபிறகே நடக்கிறது.
சில இடங்களில் ரெய்டு செல்லும்போது, பிரச்னை ஏற்பட வாய்ப்பிருந்தால் மத்திய போலீஸ் படை / துணை ராணுவத்தை உடன் அழைத்துக்கொள்கிறார்கள். ஐ.டி., ரெய்டுகளின்போது சட்டவிரோத பணபரிமாற்றம் கண்டறியப்பட்டால், அதுகுறித்த தகவலை அமலாக்கத்துறைக்கு பகிர்கிறார்கள்.
வரிதாரரின் உரிமை - கடமைகள்
ஐ.டி. ரெய்டின் அடிப்படை அம்சங்களை எல்லாரும் அறிந்து கொண்டால், யாருக்கும் ஐ.டி. குறித்த பயம் அவசியமிருக்காது. வரி சோதனையின் போது சோதனைக்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது, தேவையான ஆவணங்களையும், வருமானம், செலவுகள் சம்பந்தமான தகவல்களையும் கொடுப்பது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவது, தேவைப்படும் 'பாஸ்வேர்ட்' கொடுப்பது போன்ற செயல்கள் வரிதாரர் கடமையாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பெட்டகம் அல்லது ரகசிய அறைகளின் சாவிகள் இல்லை யென்றால், அதை உடைத்து பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. பொதுவாக சோதனை ஆரம்பமானவுடன், சோதனைக்கு உட்பட்ட அனைவரது மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ரெய்டு முடிந்த பிறகே திருப்பித்தரப்படும். வருமான வரி சோதனையில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதார அடிப்படையில் யாரை வேண்டுமானலும் புதிதாக உடனடியாக சோதனையில் உட்கொண்டு வர அதிகாரிகள் அதிகாரம் பெற்றுள்ளனர்.
வரிதாரர் உரிமைகளாக, தேவையான மருத்துவ உதவி பெறுதல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், நேரத்திற்கு உணவு, 'பஞ்சநாமா' மற்றும் ஆவணங்களின் நகல் பெறுதல் போன்றவையும் உள்ளது. ஐ.டி., ரெய்டு நடக்கும் போது, அதுகுறித்து தகவல்களை அதிகாரிகள் புலனாய்வு தலைமைக்கு தினமும் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக ரெய்டு மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் நடைபெறும்.
ரெய்டு ஏன்?
சந்தேகத்திற்குரிய வரி ஏய்ப்புகளை விசாரிப்பதற்கு வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களுக்கு நேரில் சென்றால்தான் பலனளிக்கும் என்று வருமான வரித்துறை கருதினால் ஆதார அடிப்படையில் மட்டுமே அங்கு ரெய்டுக்கு செல்ல முடியும். ஆன்லைன் பண பரிவர்த்தனைகள், வங்கி செயல்பாடுகள் போன்றவை அரசு அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதில் எழுப்பப்படும் சந்தேக பரிவர்த்தனைகளும் ரெய்டுக்கு காரணமாக அமைகின்றன.
பொதுவாக, ரியல் எஸ்டேட் தொழில், அரசு ஒப்பந்ததாரர்கள், நகைக்கடைகள் போன்ற பணபுழக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் அடிக்கடி ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. ரெய்டுகளின்போது முறையாக ஆதாரம் சமர்ப்பிக்காத, கணக்கில் வராத ரொக்கம், தங்கம், சொத்து ஆவணங்கள், டைரிகள், கணக்குப்புத்தகங்கள், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் போன்ற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
சமீபத்திய தகவல், கடந்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப்பணத்தில், 80 சதவீதம் மின்னணு சாதனங்கள் ஆதாரத்தை வைத்தே கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சோதனையின் போது, திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் 500 கிராம் வரை தங்கம், திருமணமாகாத ஒவ்வொரு பெண்ணுக்கு 250 கிராம் வரை தங்கம், ஒரு ஆண் உறுப்பினருக்கு 100 கிராம் தங்கம் அனுமதிக்கப்பட்டு அவை கைப்பற்றப்படாது.
வரி மதிப்பீடு எப்போது நடக்கும்
ரெய்டு நடந்த நான்கு மாதங்களில் வரி மதிப்பீட்டிற்காக வரி சோதனை செய்யப்பட்டவர்களது கணக்குகள் 'சென்ட்ரல் சர்க்கிள்' வருமான வரி அதிகாரிகளுக்கு மாற்றப்படும். சமீபத்திய பட்ஜெட்டில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய முறைப்படி, கடந்த பத்து ஆண்டுகளுக்கான வரி மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான வரி மற்றும் வட்டி செலுத்த நேரிடும்.
தவிர, வரியில் 50 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும். இது தவிர, சிறைதண்டனைக்கான சட்டமும் இருந்தது. ஆனால் தற்போதைய மாற்றத்தின் படி, கடந்த ஆறு ஆண்டுகள் மட்டும் வரி மதிப்பீட்டிற்கு எடுத்து கொள்ளப்படும். வரி சோதனைக்குப்பிறகு கடைசி ஆறு ஆண்டு காலத்திற்கான மறு வரித்தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
வரிதாரர் கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கு வரி மற்றும் வட்டியாக மொத்தம் 60 சதவீதம் செலுத்த வேண்டும் என்கிற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (தொகுப்பு மதிப்பீடு- ப்ளாக் அஸ்ஸஸ்மெண்ட்).
பழைய முறையை விட இது குறைவான வரி மற்றும் வட்டி கொண்டது. புதிய முறையில் சிறை தண்டனை கிடையாது. அதே சமயம், புதிய வரிப்பிரிவு 132(9b) படி, வரிசோதனையின் போது அசையும் மற்றும் அசையாச்சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளில் வரி சோதனை உண்டா?
அமெரிக்காவில் ஐ. ஆர். எஸ்., அமைப்பு, ஒருவரின் அலுவலகத்திற்கு வந்து சோதனை செய்ய முடியும். ஆனால், வீடு புகுந்து வருமான வரி சோதனை செய்ய முடியாது. ஐரோப்பிய நாடுகளில் 'எச்.எம்.ஆர்.சி., ரெய்டு' நடத்துகிறது. இப்போது செயற்கை நுண்ணறிவியல் (ஏஐ) ரெய்டுகளுக்கு உதவுகிறது. நமது நாட்டில் வருமான வரி சோதனை நியாயமற்றதாக கருதினால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் என்கிற முறை இருப்பதால், ஆதாரமில்லாமல் வரி சோதனையை அதிகாரிகள் செய்ய முடியாது.
'தாங்கள் கட்டும் வரிப்பணம் விரயம் இல்லாமல் மக்கள் நலனுக்காகவும் கட்டமைப்பு அபிவிருத்திக்காகவும் மட்டுமே செலவு செய்யப்படுகிறது' என்கிற நம்பிக்கையை அரசு ஊர்ஜிதப்படுத்தும் பட்சத்தில், வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்களும் நாணி உரிய வரியைக்கட்டும் நிலை ஏற்படும்.
- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com