முதல்வரை அவதுாறாக பேசினால் ஜெயில்; தங்கையை ஆபாசமாக பேசினால் பெயில்: திருச்சி தி.மு.க.,வில் கொந்தளிப்பு
முதல்வரை அவதுாறாக பேசினால் ஜெயில்; தங்கையை ஆபாசமாக பேசினால் பெயில்: திருச்சி தி.மு.க.,வில் கொந்தளிப்பு
ADDED : ஆக 22, 2024 05:49 AM

திருச்சி : 'அண்ணனை அவதுாறாக பேசினால் ஜெயில்; தங்கையை அவதுாறாக பேசினால் பெயிலா' என, திருச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து, தி.மு.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.
திருச்சி மரக்கடை பகுதியில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், திருச்சி காந்தி மார்க்கெட் அ.தி.மு.க., பகுதி செயலர் சுரேஷ் குப்தா, 59, அமைச்சர் நேருவையும், கனிமொழியையும் ஆபாசமாக பேசினார்.
எதிர்ப்பு இல்லை
சுரேஷ் குப்தா மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, காந்தி மார்க்கெட் போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ் குப்தாவை கைது செய்தனர். திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுக்க, அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமின் வழங்கினார். ஆனால், அரசு தரப்பில் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
யார் யாரையோ விமர்சித்து பேசியவர்களை எல்லாம் கைது செய்து, சிறையில் அடைக்கின்றனர். குறிப்பாக, ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட, முதல்வரின் குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்போரை, தமிழக போலீஸ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், முதல்வர், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோரை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பேசினார் என, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
நேரடியாக முதல்வர் குடும்பத்தினரை விமர்சித்தார் என வழக்கு போடவில்லை என்றாலும், அவர்களை விமர்சித்ததற்காகவே கைது செய்யப்பட்டார். அவர் மீது வரிசையாக தமிழகம் முழுதும் 17 வழக்குகள் போடப்பட்டன.
அவற்றை வைத்து இரு முறை குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அவரை குண்டர் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்து உத்தரவிட்ட பின்பும், இன்று வரை அவர் ஜெயிலில் தான் உள்ளார்.
மிகவும் தரக்குறைவு
ஆனால், அதே தி.மு.க.,வின் துணை பொதுச்செயலராகவும், துாத்துக்குடி எம்.பி.,யாகவும் இருக்கும் முதல்வரின் சகோதரி கனிமொழியை, மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார் திருச்சி காந்திமார்கெட் அ.தி.மு.க., பகுதி செயலர் சுரேஷ் குப்தா.
அவர் உடல்நிலையை காரணம் காட்டி உடனடியாக ஜாமின் பெற்று சென்று விட்டார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த இடத்தில் தான் எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. முதல்வரையும், குடும்பத்தினரையும் விமர்சிக்கும் சவுக்கு சங்கர் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு சிறையில் அடைக்கின்றனர்.
ஆனால், முதல்வரின் தங்கை கனிமொழியை அவதுாறாகப் பேசியவரை, உடனடியாக ஜாமினில் செல்ல அனுமதிக்கின்றனர். கட்சி நடவடிக்கை ஒரே குழப்பமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.