ஜெயரஞ்சன் வாதம் தவறு; கடன் விவகாரத்தில் பத்ரி சேஷாத்ரி 'பளீச்'
ஜெயரஞ்சன் வாதம் தவறு; கடன் விவகாரத்தில் பத்ரி சேஷாத்ரி 'பளீச்'
ADDED : ஜன 03, 2026 06:45 AM

-நமது நிருபர்-
''தமிழகத்தின் கடன் தொகை தொடர்பாக, திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் முன் வைக்கும் வாதம் தவறானது,'' என்று எழுத்தாளரும், பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைத்தன்மை
அவர் கூறியதாவது: தி.மு.க. எம்பி கனிமொழி திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மாநாட்டில் பேசும்போது, '5 ஆண்டுக்கு முன் அ.தி.மு.க. மிக மோசமான நிலையில் தமிழகத்தை எங்களிடம் அளித்தது. எக்கச்சக்கமான கடன் சுமை. வளர்ச்சி என்பது அறவே இல்லை. அப்படி கொடுத்த ஒரு மாநிலத்தை நாங்கள் மாற்றி காட்டி இருக்கிறோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டோம். இப்போது பொருளாதார நிலைத்தன்மை ஒன்றை கொண்டு வந்துள்ளோம்' என்று கூறினார். இதற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, 'தமிழகம் உத்தரப் பிரதேசத்தை விட குறைவான கடன் வாங்கிக் கொண்டிருந்த காலம் மாறி, இன்று உ.பி.,யை விட கடன் அதிகமாக பெற்றுள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக கடன் சுமை இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக திகழ்கிறது' என்றார்.
இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே விமர்சித்தனர். இப்படி வந்த விமர்சனங்களில் நம் கவனத்தை கவர்ந்தது, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கருத்து. அவர், பொருளாதாரத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். மாநில தமிழக திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருப்பவர்.
தவறான பதில்
அந்த ஜெயரஞ்சனிடம்,'தமிழகம் பல லட்சம் கோடி கடன் வாங்கி கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடன் அதிகமாகிறது, என்ன காரணம்' என பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், 'நிறைய செலவு செய்கிறாம். மெட்ரோவுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம்? செலவுக்கு திருப்பி செலுத்த வேண்டும்' என பதில் கூறுகிறார். இதுவே தவறான பதில்.
அடுத்து 'கடன் எப்போது குறையும்' என்ற கேள்வி ஜெயரஞ்சனிடம் முன் வைக்கப்பட்டது.
அதற்கு அவர், 'எதுக்கு குறையணும்? அந்த கடனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க வாங்கினீங்கன்னா அதை திருப்பி கொடுக்கணும். அரசுக்கும் உங்களுக்கும்என்ன சம்பந்தம்? அரசு கடன் வாங்கினால் அரசு திருப்பி கொடுக்க போகுது. அரசு ஒரு தனி நிர்வாகம்.தினம் வருமானம் வருகிறது. தினம் செலவாகிறது.
செலவின் ஒரு பகுதி கடனை திருப்பி கட்டு வது. கடனுக்கான வட்டியை தருவது. அந்த கடனை வாங்கி என்ன பண்றாங்க? மெட்ரோ ரயில் போடுறாங்க. பி.டி.சி. பஸ் வாங்குறாங்க. ஏதாவது அணை கட்டுவாங்க. வருங்காலத்தில் பண்ணுகிற முதலீட்டை இப்போது கடனாக வாங்குகிறார்கள். பிறகு அதை திரும்ப செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்' என பதில் கூறுகிறார்.
தற்காத்து கொள்ளும் விஷயங்களை மட்டும் தான் ஜெயரஞ்சன் பேசுகிறார். தற்காத்து கொள்ள முடியாத விஷயங்களை அமைதியா அப்படியே விட்டுவிடுவார். கடன் பற்றி ஊடகத்தினர் கேட்டால் நீங்கள் விளக்கிச்சொல்ல வேண்டும். அதுதான் உங்களுடைய பணி. நீங்க அரசியல் கட்சிக்காரர் கிடையாது. பொறுப்பான அதிகாரி. டாக்டர் ஜெயரஞ்சன் ஒரு அதிகாரி. தேர்தலுக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை . 'நீங்களா திருப்பி கொடுக்க போறீங்க' என கேட்கிறார்.
ஆமாம், நாம் தான் திருப்பிக் கொடுக்கிறோம். நேரடியாக எனது பையில் இருந்து கொடுக்கவில்லை. மறைமுகமாக நான் கட்டும் வரியில் இருந்துதான் ஒரு பகுதியை நீங்கள் வட்டியாக கட்டுகிறீர்கள். கடைசியாக, அது என்காசுதான். உங்க காசு இல்லை. நீங்களும் என்னை போன்ற ஒருவர்தான். இந்த மாதிரியான கேள்விக்கு, இப்படி பதில் சொல்வது அடிப்படையில் தவறானது.
கடன் வாங்கிதான் ஒரு அரசு அரசை நடத்த வேண்டும் என்பது சரி. அதை நீங்கள் விளக்கி சொல்ல வேண்டும். ஏன் இந்த கேள்வி வருகிறது என்றால், 5 ஆண்டுக்கு முன், 2020ல் அப்போதைய அரசு கடன் வாங்கியது பற்றி தி.மு.க.வினர் என்ன பேசினர் என்று பார்க்க வேண்டும். அப்போது ஒரு பேச்சு; இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு.
ஜெயரஞ்சன் கூற்றுப்படி, உலகத்தில் எல்லா அரசுகளும் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். கடன் வாங்குவது தவறல்ல. அடுத்து கடன் சுமைக்கு வரம்பு உள்ளதா? அந்த வரம்பு என்ன என்று ஜெயரஞ்சன் சொல்வது சரிதான். அரசுக்கு, வருவாய், செலவு என இரண்டும் இருக்கிறது. வருவாயும், செலவும் சமமாக இருந்தால் போதும்; சேமிக்கத் தேவையில்லை.
முதலீட்டுச்செலவு, வருவாய்ச் செலவு என்பது பற்றி புரிந்து கொள்ள வேண்டும். வருவாய்ச் செலவு என்பது அந்த ஆண்டே, அன்றைக்கே செலவாக எழுதுவது. முதலீட்டுச்செலவு என்பது, அதில் நீங்கள் உருவாக்கும் சொத்து, பல ஆண்டுக்கு உங்களுக்கு பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். எனவே, முதலீட்டுச்செலவுக்கு கடன் வாங்குவதில் தவறில்லை என்பது ஏற்கப்பட்ட விதி. ஆனால், இதுதான் நடக்கிறதா? நாம் வாங்கும் கணிசமான கடன், வருவாய் செலவினங்களை எதிர்கொள்ளவே செலவாகிறது.
வருவாய் பற்றாக்குறை அதிகம்
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கணிசமாக இருக்கிறது. உங்கள் வருவாய் பற்றாக்குறை அதிகமாக இருந்தால், நீங்கள் முதலீட்டுக்காக வாங்கும் பணத்தை ஒழுங்காக முதலீடு செய்யவில்லை என்று அர்த்தம். முதலீட்டுக்காக வாங்கிய கடனை, பெண்களுக்கு இலவச பஸ் வசதி போன்ற நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தும்போது கேள்வி எழுகிறது.
ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி.,) வருவாய் பற்றாக் குறையானது, 3 சதவீதத்துக்கும் மேல் போகக் கூடாது. மின் துறை சீர்திருத்தங்களில் தமிழகம் முதன்மையாக இருக்கிறது. அதற்கு கடன்கள் நிறைய வருகின்றன. எனவே, 3 முதல் 4 சதவீதம் வரை கடன் வாங்கலாம். என்னென்ன காரணங்களுக்கு கடன் வாங்கலாம் என்று இருக்கிறது.
தமிழகத்தின் கடன், இன்றும் சரி, இப்போது இருக்கும் தி.மு.க., முன்பு அ.தி.மு.க.வை கேலி செய்து திட்டியபோதும் சரி, இந்த வரம்புக்குள் தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறையை இல்லாமல் செய்து விடுவோம் என்று தி.மு.க. அரசு சொல்கிறது.வருவாய் பற்றாக்குறை என்பது, கடன் வாங்கி, எந்த முதலீடும் செய்யாமல் சாப்பாட்டுக்கு செலவிட்டது போன்றது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை பற்றி ஜெயரஞ்சனிடம் கேட்டிருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்வதாகவும் தி.மு.க. கூறியது. அப்படி அமல் செய்தால், வருவாய் பற்றாக்குறை என்ன ஆகும் என்றும் கேட்டிருக்க வேண்டும்.
இடி விழும்
வருவாய் பற்றாக்குறை அதிகமானால், நீங்கள் வாங்கும் கடன் எல்லாம் அதற்குத்தான் செலவாகும். கடன் வாங்கி ஓய்வூதியம் கொடுத்தால், சாலைகள், பாலங்கள், கட்டுமானங்களை எங்கே இருந்து கட்டுவார்கள்? சாத்தியமே இல்லாதது.
நலத்திட்டங்கள் என்று தமிழகம் அள்ளிக்கொடுப்பதை பார்த்து விட்டு, கர்நாடகாவும் அப்படியே அறிவித்தது. இவர்களை பார்த்து பா.ஜ.வும், ம.பி., மஹாராஷ்டிரா மாநிலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டது. அவர்கள் தலையில் எப்போது இடி விழும் என்று தெரியவில்லை. அவர்களை காட்டிலும், அதிகம் பாதிப்புள்ள மாநிலம் பஞ்சாப்.
சீக்கிரம் அந்த மாநிலம் திவால் ஆகப்போகிறது; யார் வந்து காப்பாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. அப்படி எல்லாம் ஆகக்கூடாது என்றால், கடன் ஓகே, ஆனால், வருவாய் பற்றாக்குறையை பூஜ்யம் ஆக்குங்கள். இந்த விவகாரத்தில், ஜெயரஞ்சன் கூறியதன் தொனி சரியல்ல என்றாலும், ஒரு முக்கியமான விவாதம் இது என்று நான் பார்க்கிறேன். அந்த வகையில், இதை தொடங்கி வைத்த ஜெயரஞ்சனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு பத்ரி சேஷாத்ரி கூறினார்

