நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து நுால்; நடவடிக்கை எடுக்க பா.ஜ., கோரிக்கை
நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து நுால்; நடவடிக்கை எடுக்க பா.ஜ., கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 07:04 AM

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சிக்கும் நுாலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு, தமிழக பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்ணியத்தின் மீதான ஒரு வெட்கக்கேடான தாக்குதலை நான் எடுத்து காட்டுகிறேன். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் சமீபத்தில், பல நுாற்றாண்டுகளாக வரலாற்று, இலக்கிய மற்றும் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள பண்டைய தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரிய முறையை நிலைநிறுத்தி, நியாயமான தீர்ப்பை வழங்கினார்.
அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் முன்னுதாரணங்களில் வேரூன்றிய இந்த தீர்ப்பு, வேண்டுமென்றே அவதுாறு செய்யப்பட்டுள்ளது. கீழக்கட்டு பதிப்பகம், 'திருப்பரங்குன்றம் விவகாரம் - ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ்., ரவுடியா' என்ற தலைப்பில் நுால் வெளியிட்டுள்ளது. அட்டைப்படம், நீதிபதியை ஒரு கை திரிசூலத்தை பிடித்து கொண்டு, மற்றொரு கை காவி கொடியை பிடித்து கொண்டு, கொடூரமாக கேலிச்சித்திரமாக்குகிறது. இந்த நுால், புத்தக கண்காட்சியில், 172 - 173 அரங்குகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நீதித்துறை நேர்மையை கேலி செய்கிறது. இது, நீதித்துறையை அவமதிக்கிறது. நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, சென்னை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

