கோவை 'டாஸ்மாக்' பார்களில் வசூலை துவக்கியது கரூர் கும்பல்
கோவை 'டாஸ்மாக்' பார்களில் வசூலை துவக்கியது கரூர் கும்பல்
ADDED : டிச 23, 2024 04:51 AM

கோவை : கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கூடங்களில், கரூரை சேர்ந்தவர்கள் வசூல் வேட்டையை துவக்கியுள்ளனர். ஏரியாவுக்கு ஏற்ப, லட்சக்கணக்கில் பணம் கேட்பதால், 'பார்' ஏலம் எடுத்தவர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
கோவை மாவட்ட வடக்கு பகுதியில் 156, தெற்கு பகுதியில் 129 எண்ணிக்கையில், டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. பார் ஏலம் எடுத்து இருப்பவர்கள், கடை அமைந்துள்ள பகுதிக்கு ஏற்ப, அரசுக்கு 'டிடி'யாக லட்சக்கணக்கில் தொகை செலுத்துகின்றனர். இத்தொகை, கடைக்கேற்ப மாறுபடுகிறது.
சமீபகாலமாக, கரூரை சேர்ந்த சிலர், பார் நடத்தும் உரிமையாளர்களை சந்தித்து, 'மாதம் 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, கடை கடையாக வசூல் வேட்டையை துவக்கியுள்ளனர். 'தராவிட்டால், கடையை நடத்த விட மாட்டோம்' என, பார் உரிமையாளர்கள் மிரட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக, மதுக்கடை பார் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: கரூரை சேர்ந்த மூவர், ஒவ்வொரு மதுக்கடை பார்களுக்கும் வருகின்றனர். அரசுக்கு செலுத்த வேண்டிய டிடி தர வேண்டியதில்லை. கடைக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, 'டார்ச்சர்' செய்கின்றனர். கோவை முழுதும் ஒரு வாரமாக அராஜகம் செய்கின்றனர்.
இடத்துக்கு வாடகை, லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டியுள்ளது; அரசுக்கு டிடி கொடுக்க வேண்டும்; போலீசாருக்கு மாமூல் தர வேண்டும். இது போக, 'பார்ட்டி பண்ட்' என, 'கரூர் டீம்' பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றது. தொழில் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.