UPDATED : நவ 09, 2025 07:54 AM
ADDED : நவ 08, 2025 11:58 PM

பல வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்தவர், முன்னாள் தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மீண்டும் ஒரு வழக்கில் சிக்குவாரா? இந்த கேள்வி டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது. அது என்ன புது வழக்கு?
கரூர் சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. விரைவில் இந்த குழு கரூருக்கு வந்து, சம்பவ இடத்தைப் பார்வையிட உள்ளது. அத்துடன், இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட பலரையும் சந்திக்க உள்ளதாம்.
'நீதிபதி அஜய் ரஸ்தோகியை த.வெ.க., நிறுவனர் நடிகர் விஜய் சந்தித்து, தன் தரப்பு வாதங்களை முன் வைப்பதுடன், வேறொரு விஷயத்தையும் அவர் சொல்வார்' என்கின்றனர்.
'கரூர் சம்பவம் ஒரு சதி; இதில் தி.மு.க., சம்பந்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, செந்தில் பாலாஜி தான் காரணம். எங்களுக்கு, அவப்பெயர் ஏற்படுத்த செந்தில் பாலாஜி செய்த கீழ்த்தரமான செயல்' என, நீதிபதி குழுவிடம் விஜய் சொல்ல வாய்ப்பிருக்கிறதாம்.
'ஏற்கனவே விஜய் வாகன ஓட்டி உட்பட பலரையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; ஒரு சிலருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் பெயரை விஜய் எடுத்தால், நிச்சயம் அவருக்கும் சம்மன் அனுப்பப்படும்; அவரும் விசாரிக்கப்படுவார்' என, சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம், கரூர் விசாரணை சம்பந்தப்பட்ட விஷயங்களில், டில்லியில் உள்ள ஹிந்தி மீடியாக்கள் ஆர்வமாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

