கரூர் சம்பவத்தில் இறுதி அறிக்கை தேர்தலில் எதிரொலிக்கும்?
கரூர் சம்பவத்தில் இறுதி அறிக்கை தேர்தலில் எதிரொலிக்கும்?
UPDATED : நவ 02, 2025 07:56 AM
ADDED : நவ 01, 2025 11:47 PM

த .வெ.க., தலைவரும் நடிகருமான விஜய், செப்டம்பரில் கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தில், 41 பேர் பலியாகினர். 'இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்கும்; அதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு கண்காணிக்கும்; விசாரணையை ஒருங்கிணைக்க, ஒரு சீனியர் அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். விஜய் பிரசாரத்திற்கு வருவதற்கு முன், சம்பவ இடம் எப்படி இருந்தது? அவர் வந்த போது எப்படி இருந்தது என, போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனராம்.
'ஏதோ த வறு நடந்துள்ளது; எதுவோ சரியில்லை. விஜய்க்கு எதிராக சதி நடந்துள்ளதா?' என, அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனராம். குறிப்பாக, 'விஜய் வாகனம் வரும் இடத்தில் ஒரு பள்ளம் உள்ளது. அது வேண்டுமென்றே தோண்டப்பட்டுள்ளதாக தெ ரிகிறது' என, நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனராம். 'முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும்' என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த விபத்தை மட்டும் விசாரிக்கவில்லை. அ.தி.மு.க.,விற்கு இந்த இடத்தை மறுத்த போலீஸ், விஜய்க்கு மட்டும் எதற்கு அனுமதி அளித்தனர்; இதன் பின்னணியில் யார் உள்ளனர் என, கரூர் விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரிப்பதாக சொல்லப்படுகிறது.
தவிர, இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு வந்து, 15 நாட்களுக்கு மேலாகி விட்டது; ஆனால், தமிழக அரசு சி.பி.ஐ.,க்கும், தமிழக அரசுக்கும் ஒருங்கிணைக்கும் அதிகாரியை இதுவரை நியமிக்கவில்லை. விரைவில் நியமிக்கும்படி, தமிழக தலைமை செயலருக்கு நீதிபதி ரஸ்தோகி கடிதம் எழுதியுள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரலில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கரூர் விவகாரத்தில், சி.பி.ஐ.,யின் இறுதி கட்ட அறிக்கை ஜன., அல்லது பிப்., மாதத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

