பீஹார் தேர்தலில் பா.ஜ.,வின் மந்திர வார்த்தை ‛காட்டாட்சி!' : ஆர்.ஜே.டி.,க்கு எதிராக மீண்டும் பலிக்குமா?
பீஹார் தேர்தலில் பா.ஜ.,வின் மந்திர வார்த்தை ‛காட்டாட்சி!' : ஆர்.ஜே.டி.,க்கு எதிராக மீண்டும் பலிக்குமா?
ADDED : நவ 01, 2025 11:54 PM

பீஹாரில், முதற்கட்ட சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை வீழ்த்த, 'காட்டாட்சி' என்ற சொல்லாடலை, மந்திர வார்த்தையாக, ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பயன்படுத்தி வருகிறது. பிரசாரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி முதல் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வரை அந்த சொல்லாடலை பயன்படுத்த தவறவில்லை. கடந்த காலங்களில் லாலு பிரசாத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்த முதல்வர் நிதிஷ் குமார் கூட, 'காட்டாட்சி' என்ற சொல்லாடலை பிரதானமாக பயன்படுத்தி வருகிறார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களிடையே எழுவது சகஜம். அதிலும், தே.ஜ., கூட்டணி, ஆர்.ஜே.டி., - காங்., கூட்டணி என இரு முகாமிலும் கைகோர்த்து மாறி மாறி நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இதனால், வாக்காளர்களுக்கு அவர் மீது அதிருப்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
அசுர வளர்ச்சி எனினும், தற்போதைய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான இந்த மனநிலை எடுபடுமா என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது. அதற்கு காரணம், பா.ஜ.,வின் வளர்ச்சி. பீஹாரில் முதல் முறையாக அந்த கட்சி சொந்தமாக அரசு அமைக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது.
ஒரு வழியாக, பா.ஜ.,வால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதை அக்கட்சிக்காக தொடர்ந்து ஓட்டளித்து வரும் வாக்காளர்களும் உணர்ந்து இருக்கின்றனர்.
ஒடிஷா, கர்நாடகா, அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடிந்த பா.ஜ.,வால், பீஹாரிலும் நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக லாலு, நிதிஷ் என மாறி மாறி இருவரது நிர்வாகத்தையும் பீஹார் மக்கள் பார்த்து விட்டனர்.
அவர்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டுமெனில், அது பா.ஜ., தலைமையில் அமையும் அரசு தான். அது மட்டுமே பீஹார் மக்களுக்கு தற்போது எஞ்சி இருக்கிறது. எனவே, இம்முறை மாற்றத்திற்காக அவர்கள் பா.ஜ.,வை ஆதரித்து ஓட்டளிக்கக் கூடும் என்ற கணிப்புகளையும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.
அதே சமயம், கடுமையான போட்டியை கொடுக்கும் அளவுக்கு எதிர்க்கட்சி முகாமில், முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் களமிறக்கப்பட்டு உள்ளார். நிதிஷ் குமாரை விட வயது குறைவானவர். இளைஞர் என்ற அடிப்படையில் அவருக்கும் சில சாதகமான அம்சங்கள் இருக்கவே செய்கின்றன.
அவற் றையெல்லாம் ஓரங்கட்டுவதற்காகவே பா.ஜ., ஒரு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. அது தான் 'காட்டாட்சி' என்ற சொல்லாடல்.
திண்டாட்டம் பீஹாரில் ஆர்.ஜே.டி., தலைவர் லாலுவும், அவரது மனை வி ரப்ரி தேவியும் மாறி மாறி, 15 ஆண்டுகள் நடத்திய ஆட்சியில், தொடர் படுகொலை, பணத்துக்காக கடத்தல், மோசமான சுகாதாரம், அதல பாதாளத்திற்கு சென்ற மாநில வளர்ச்சி, தேர்தல் என்றால் ஓட்டுச்சாவடிகளை கைப்பற் றுவது, முடங்கிய அடிப்படை வசதிகள் என, மக்களின் பாடு திண்டாட்டம் ஆனது.
இதனால், அவர்களது ஆட் சி, 'காட்டாட்சி' என்ற மிக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த விமர்சனமே, லாலுவின் ஆர்.ஜே.டி.,க்கு அடுத்து வந்த தேர்தலில் தோல்வியை கொடுத்தது. ஆர்.ஜே.டி., மீதான வாக்காளர்களின் அந்த அதிருப்தி இன்று வரை உயிர்ப்புடனே இருப்பதாகவே தோன்றுகிற து.
தேர்தல் பிரசாரத்திற்காக சமஸ்தீ பூருக்கு கடந்த வாரம் சென்ற பிரதமர் மோடி, தன் 45 நிமிட உரையில், 17 முறை, 'காட்டாட்சி' என்ற சொல்லாடலை பயன்படுத்தினார்.
அவருக்கு பின், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவு ம், லாலு - ரப்ரி ஆட்சியில் நிகழ்ந்த படுகொலைகளை பட்டியலிட ம றக்கவில்லை.
' இந்த தேர்தல், எம்.எல்.ஏ., வையோ அல்லது அமைச்சரையோ தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. மீண்டும் ஒரு முறை காட்டாட்சியை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல்' எனஅமித் ஷா கடுமையாக விமர்சித்தார்.
பீஹா ர் முதல்வர் நிதிஷ் குமார், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா ஆகியோரும் கூட, காட்டாட்சி என்ற சொல்லாடலை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தினர்.
பீஹாரில், ஆர்.ஜே.டி., ஆட்சியை இழந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அக்கட்சி மீது படிந்த, 'காட்டாட்சி' என்ற நிழல் இன்று வரை விலகவே இல்லை.
'காட்டா ட்சி' குற்றச்சாட்டு இந்த முறையும் தே.ஜ.,வுக்கு கைகொடுக்குமா அல்லது ஆர்.ஜே.டி., மீது படிந்த அந்த கருப்பு நிழல் வி லகி தேஜஸ்வியை முதல்வராக்குமா என்பது, வரும் 14ல் தெரிந்துவி டும்.
- நமது சிறப்பு நிருபர் -:

