கெஜ்ரிவால் வருகையால் ஆம் ஆத்மி நம்பிக்கை!: ஹரியானாவை கைப்பற்ற தீவிரம்
கெஜ்ரிவால் வருகையால் ஆம் ஆத்மி நம்பிக்கை!: ஹரியானாவை கைப்பற்ற தீவிரம்
ADDED : செப் 14, 2024 11:17 PM

ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், கெஜ்ரிவாலின் வருகையால் ஹரியானாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் இடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டில்லியை ஒட்டியுள்ள ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் தேர்தல் நடக்க உள்ளது.
தேசிய அளவிலான 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்., இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடந்தது.
தொகுதிப் பங்கீடு
ஆம் ஆத்மி, 10 இடங்களுக்கு மேல் கேட்ட நிலையில், ஐந்துக்கு மேல் தருவதற்கு காங்கிரஸ் தயாராக இல்லை.
இதனால், தொகுதிப் பங்கீடு பேச்சு தோல்வியில் முடிந்து, தனித்தனியாக போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தார். ஆனால் தற்போது ஜாமினில் உள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவர் முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல முடியாது, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட முடியாது. இதனால், ஹரியானா தேர்தலில் அவர் முழு கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்ததுபோல், அதையொட்டியுள்ள ஹரியானாவையும் கைப்பற்ற ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.
கட்சியில் இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வருகை, கட்சியினர் இடையே புதிய தைரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தேர்தல்களாகவே, எந்தெந்த மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் ஆம் ஆத்மி இருந்ததோ, அங்கெல்லாம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிஉள்ளது.
அவ்வாறு முன்னேறும்போது, காங்கிரசை மூன்றாவது நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. இதனாலேயே, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு பல மாநிலங்களில் காங்., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இண்டி கூட்டணியில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் இரண்டு கட்சிகளும் எதிர்த்தே போட்டியிடுகின்றன. இதுதான், ஹரியானாவிலும் நிகழும் என, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாய்ப்பு
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்ததை காங்கிரஸ் வரவேற்றாலும், ஹரியானாவில் அதன் போட்டியை சமாளிக்க வேண்டியுள்ளது கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும், காங்கிரசுக்கு இழப்பாகும். காங்கிரசின் ஓட்டுகளையே ஆம் ஆத்மி பறிக்கும் என்பது மாநில காங்., நிர்வாகிகளின் அச்சமாக உள்ளது.
இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., உள்ளது.
அதேநேரத்தில் கெஜ்ரிவால் வருகையால், பஞ்சாபை தொடர்ந்து ஹரியானாவிலும் ஆட்சி அமைக்க முடியும் என ஆம் ஆத்மி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -