ஆபத்தை உணராமல் தனுஷ்கோடியில் தீடையை கடக்கும் கேரள படகுகள்
ஆபத்தை உணராமல் தனுஷ்கோடியில் தீடையை கடக்கும் கேரள படகுகள்
ADDED : செப் 24, 2024 03:15 AM

ராமேஸ்வரம்: ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி மணல் தீடையை கடந்து செல்லும் கேரள மீனவர்களிடம் தனுஷ்கோடி மீனவர்கள் வழிகாட்டுவதாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் படகுகள் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் இலங்கை வழியாக சுற்றிச் சென்றன.
அந்தமான் கடலில் மீன் பிடித்த 8 கேரள விசைப்படகுகள் 80 மீனவர்களுடன் மீண்டும் கேரளா செல்ல தனுஷ்கோடி வந்தன. அரிச்சல்முனையில் இருந்து 4 கி.மீ.,ல் உள்ள 3 மற்றும் 4ம் மணல் தீடை இடையே கடந்து கேரளா செல்ல தனுஷ்கோடி கடலில் காத்திருக்கின்றன. இவர்களுக்கு வழிகாட்டியாக நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு படகிற்கு ரூ.1000 முதல் 2000 வசூலித்து மணல் தீடையை கடந்து கொண்டு விடுவதாக பேரம் பேசி வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் அதிக நீரோட்டம், ஆங்காங்கே மணல் திட்டுகள் இருப்பதால் படகுகள் சிக்கி மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு தீடையை கடக்கும் மீனவர்களை தடுக்க அல்லது வழிகாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

