ADDED : ஜூலை 06, 2025 11:03 PM

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவில், அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இங்கு, மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு, 71 இடங்கள் தேவை.
'ஹாட்ரிக்' வெற்றி
தொடர்ந்து இரண்டு முறை வென்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயன், 'ஹாட்ரிக்' வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீவிரமாக உள்ளது.
கேரளாவை பொறுத்தவரை பா.ஜ., மூன்றாவது கட்சியாக இருந்தாலும், தேர்தல் என வந்து விட்டால், மார்க்., கம்யூ., -- காங்., இடையே தான் நேரடி போட்டி. கடந்த மாதம் 19ம் தேதி, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.
இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஸ்வராஜை, ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆர்யாதன் சவுகத், 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இன்னும் 10 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த வெற்றி காங்., கட்சிக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆளும் மார்க்., கம்யூ., கட்சிக்கு ஏமாற்றத்தையும், அச்சத்தையும் தந்துள்ளது.
கேரளாவில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினராக உள்ள நிலையில், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சி கூட்டணியும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில், கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கிறிஸ்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிருப்தி
அதே சமயம், ஐக்கிய ஜனநாயக முன்னணியில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கையே ஓங்கி இருக்கிறது.
அக்கட்சி சொல்வதையே தலையாட்டி பொம்மையாக காங்., கேட்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
இப்படி இரு கூட்டணியும் முஸ்லிம்கள் மீது மாறி மாறி பாசத்தை பொழிவதால், கிறிஸ்துவ சமூகத்தின் ஒரு பிரிவினர் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
இதனால், வரும் சட்ட சபை தேர்தலில் கோட்டயம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி போன்ற மாவட்டங்களில் உள்ள கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்கள், காலங்காலமாக ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் கோட்டையாக இருந்து வருகின்றன. மாநிலத்தின் அரசியல் சூழலை பயன்படுத்தி, இந்த மாவட்டங்களை தங்களுக்கு சாதகமாக பா.ஜ., மாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரளாவில் குறிப்பிட்ட கிறிஸ்துவர்களிடையே, முஸ்லிம் வெறுப்பு நீடிப்பது உண்மை தான் என்றாலும், அவர்கள் அனைவருமே, பா.ஜ.,வுக்கு தான் ஓட்டளிப்பர் என, உறுதியாக கூற முடியாது.
கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, அரசியல் கட்சியை பார்க்காமல், தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளருக்கே ஓட்டளித்து வந்துள்ளனர். இது தான் கடந்த கால வரலாறு.
எதிர்பார்ப்பு
ஆனால் இந்த முறை நிலைமை அப்படி இருக்காது என, சொல்லப்படுகிறது. முஸ்லிம்கள் விவகாரத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி மீது அதிருப்தி நிலவுவதால், வரும் சட்டசபை தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தினர் யாருக்கு ஓட்டளிக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது.
இந்த விவகாரத்தை இரு கூட்டணியும் எப்படி கையாளப் போகின்றன என்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.